முரசொலியில் தினம்தோறும் கடிதம் எழுதிய கருணாநிதி வேலையில்லாமல் இருந்தாரா பாமக மாநில பொருளாளர் திலகபாமா கேள்வி எழுப்பியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி மாநில பொருளாளர் திலகபாமா சிவகாசியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுத்து அதற்கான தீர்வுகளை அறிக்கையாக வெளியிடுவது வழக்கம். முதல்வர் ஸ்டாலின் தொழிலதிபர் அதானியை சந்தித்தது ஏன் என கேள்வி கேட்டு மருத்துவர் ராமதாஸ் அறிக்கை வெளியிடுகிறார். தினம்தோறும் மக்கள் பிரச்சனைகளை அறிக்கையாக வெளியிடும் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் வேலையில்லாதவர் என்றால், முரசொலியில் தினந்தோறும் கடிதம் எழுதிய கருணாநிதி வேலையில்லாமல் எழுதினாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மைனாரிட்டி அரசு என அதிமுக திமுகவை கடுமையாக விமர்சனம் செய்த போது பாமக தான் திமுகவுக்கு கை கொடுத்தது. மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை பாமக திரும்பப் பெறாமல் இருந்திருந்தால், இன்று கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் அமைத்திருக்க முடியாது.
தமிழ்நாட்டின் மிக மூத்த அரசியல் தலைவர் மருத்துவர் ராமதாசின் கேள்விகளுக்கு பதில் சொல்ல திராணியில்லாமல் முதலமைச்சர் பேசி இருப்பது மோசமானது. அவரது இந்த கருத்துக்கு முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும். முதலமைச்சரைக் கண்டித்து விருதுநகர் மாவட்டத்தில் ஓரிரு நாட்களில் போராட்டம் நடத்தப்படும்.
தருவைகுளத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை விடுவிக்க கோரி இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு பாமக போராட்டம் நடத்தி, தூதரக அதிகாரிகளை நேரில் சந்தித்து முறையிட்டோம். மீனவர்களை விடுதலை செய்யக்கோரி இலங்கை அரசுக்கும் பாமக சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. தற்போது தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். மீனவர்களின் படகுகளை விடுவிக்கவும், தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக மீன்பிடிக்க செல்வதை மத்திய அரசு உறுதி செய்ய மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் திலகபாமா தெரிவித்தார்.