10 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் மத்திய அரசின் திட்டங்களின் ஏற்க மாட்டோம் என முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 497 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 280 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற திட்டங்களை பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்த முதலமைச்சர், 508 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை 50 ஆயிரத்து 606 நபர்களுக்கு வழங்கினார்.

பின்னர் பேசிய மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சியில் பெண்களுக்கு பொருளாதார தன்னம்பிக்கை வளர்த்துள்ளோம். சில தடைகள் மட்டும் இல்லை எனில் தமிழ்நாடு வேகமாக வளர்ச்சி பெறும் என குறிப்பிட்டார். தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை தடுப்பதே பாஜகவின் திட்டமாக இருப்பதாக குற்றம் சாட்டிய முதலமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழர்களை நாகரிகம் மற்றவர்கள் என நாடாளுமன்றத்தில் பேசி இருக்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இப்படிப் பேசிய சில மணி நேரங்களிலேயே நம்முடைய தமிழ்நாடு எம்பிக்கள் அவர் பேச்சை வாபஸ் பெற வைத்துள்ளனர் அவர்களை பாராட்டுகிறேன். கல்வியை தனியார் மையமாக்குவது, பணக்காரர்களுக்கு மட்டுமே கல்வி, சிறுபிள்ளைகளுக்கும் பொதுத்தேர்வு ஆகியவைதான் புதிய கல்விக் கொள்கையில் இருக்கிறது.்மும்மொழி கொள்கையை ஏற்காவிட்டால் தமிழகத்திற்கான நிதி கிடைக்காது என தர்மேந்திர பிரதான் பிளாக்மெயில் செய்கிறார். நாக்பூரின் நாசக்கார வேலை தமிழகத்தில் எடுபடாது. பத்தாயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் மத்திய அரசின் திட்டங்களை தமிழ்நாடு ஏற்காது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.




