சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வரும் 27ஆம் தேதி கடைசி நாள் என மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தியில்,
சென்னையில் மட்டும் மொத்தம் 8 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் செயல்பட்டு வருகின்றது என்றும், இதில் பல்வேறு பாடப்பிரிவுகள் கற்பிக்கப்பட்டு வருகின்றது என்றும் தெரிவித்துள்ளார். இக்கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.
இளங்கலைப் பட்டப்படிப்பில் சென்னை மாவட்டத்தில், மாநிலக் கல்லூரியில் 2380 இடங்களும், இராணி மேரி கல்லூரியில் 2038 இடங்களும், பாரதி மகளிர் கல்லூரியில் 1410 இடங்களும் நிரப்பப்பட இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், டாக்டர் அம்பேத்கர் அரசுக் கலை கல்லூரியில், 1086 இடங்களும், காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியில் 1468 இடங்களும், ஆர்.கே.நகர், அரசுக் கலை கல்லூரியில் 590 இடங்களும் நிரப்பப்பட இருப்பதாகத் தெரிவித்துள்ளார். நந்தனம், அரசுக் கலை கல்லூரியில், 1430 இடங்களும், ஆலந்தூர் அரசுக் கலை கல்லூரியில் 280 இடங்களும் நிரப்பப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அரசு, அரசு உதவிபெறும் கல்லூரி மாணவ/ மாணவியர்களுக்குப் ‘புதுமைப்பெண்’ மற்றும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டங்கள் மூலமாக ரூ.1000/- வழங்கப்பட்டு வருகிறது என்றும், ‘நான் முதல்வன் திட்டம்’ மூலம் வேலைவாய்ப்பிற்கான பயிற்சிகள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
மேலும், அரசால் வழங்கப்படும் கல்வி உதவித் தொகைகள் மற்றும் இலவசப் பேருந்து வசதிகளும் உள்ளன என்றும், திறமை வாய்ந்த ஆசிரியர்களால் பாடங்கள் நடத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாகக் கடந்த 07.05.2025 முதல் பெறப்பட்டு வருகின்றன என்றும், இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 27.05.2025 கடைசி நாள் என்றும் தெரிவித்துள்ளார்.
தாமாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் (Admission Facilitation Centre-AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க ஒரு மாணவருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.48/-ம், பதிவுக் கட்டணம் ரூ.2/- மட்டுமே ஆகும். இதில் SC/ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை. பதிவுக் கட்டணம் ரூ.2/- மட்டும் செலுத்தினால் போதும். விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை Debit Card/ Credit Card/ Net Banking/ UPI மூலம் இணையதளம் வாயிலாகச் செலுத்தலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலும், மாணவர்கள் சேர்க்கை தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெற கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் செயல்படும் உதவி மையத்தைத் திங்கள் முதல் வெள்ளிக்கிழமைகளில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நேரிலும், 044-24343106 / 24342911 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என்றும் சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.




