திமுக ஆட்சி அமைந்த இந்த நான்கு ஆண்டுகளில் 41 புதிய கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
உயர்கல்வித் துறை சார்பில் 2025-26 ஆம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில் வேலூர், திருச்சிராப்பள்ளி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைக் காணொலிக் காட்சி வாயிலாக சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பின்னர் இது தொடர்பாக தமது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், நமது திராவிட மாடல் அரசில், கடந்த நான்கே ஆண்டுகளில், உயர்கல்வித் துறை சார்பில் 37 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 4 கல்லூரிகளும் உருவாக்கப்பட்டுள்ளன! அதில், இன்றைய நிகழ்வில் நான்கு கல்லூரிகளைத் தொடங்கி வைத்தேன். உயர்கல்வி எனும் உயரத்தில் நம் மாணவர்களின் அறிவுக்கொடி பறந்திட வேண்டும் என பெருமிதம் பொங்கத் தெரிவித்துள்ளார்.
