முதல்வர் மருந்தகங்களில் பாக்கெட் உணவுப் பொருட்கள் மற்றும் மாவு வகைகள் விற்கப்படுவதாகவும் வாடிக்கையாளர் வரத்து குறைவாக உள்ளதாகவும் மக்கள் எதிர்பார்க்கும் மருந்து வகைகள் கிடைக்காத நிலை உள்ளதாகவும் நாளிதழ் ஒன்றில் வெளியிட்டுல்ள செய்தியில் உண்மை இல்லை என கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மருந்தகங்களில் மருந்து விற்பனை குறைந்து விட்டதாகவும், பிற பொருட்களின் விற்பனை நடைபெற்று வருவதாகவும் செய்தி வெளியாகி இருந்தது. இதுற்கு மறுப்புத் தெரிவித்து அமைச்சர் பெரிய கருப்பன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் முதல்வர் மருந்தகங்கள் ஜெனரிக் மருந்துகள், நியூட்ராசுட்டிக்கல்ஸ், இந்திய மருந்துகள், சர்ஜிக்கல்ஸ் மற்றும் பிராண்டட் மருந்துகளை சந்தை விலையைக் காட்டிலும் 70 முதல் 90 விழுக்காடு குறைவான விலையில் விற்பனை செய்து வருகின்றன.
மருந்தகங்கள் துவங்கிய பிப்ரவரி மாதத்தில் நாளொன்றுக்கு சுமார் 300 ரூபாய் சராசரி மருந்து விற்பனை இருந்த நிலையில் இருந்து தற்போது நாளொன்றுக்கு சராசரியாக 800 ரூபாய்க்கு மேல் விற்பனை நடைபெற்று வருகிறது. மேலும் துவக்கத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 5 நபர்கள் ஒவ்வொரு மருந்தகத்திற்கும் வந்து கொண்டிருந்த நிலையில் தற்பொழுது நாளொன்றுக்கு சராசரியாக 20 நபர்கள் மருந்துகளை பெற்று பயனடைந்து வருகின்றனர்.
இதுவரை சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பிலான ஜெனரிக் மருந்துகளும் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பிராண்டட் மருந்துகளும் முதல்வர் மருந்தகங்கள் வாயிலாக மிக குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மருந்தகத்திலும் 219 ஜெனரிக் மருந்துகளும், 170 பிராண்டட் மருந்துகளும் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல் அந்தந்தப் பகுதிகளின் தேவைக்கேற்பத் தேவைப்படும் பிற மருந்துகளையும் அந்தந்த மாவட்டங்களிலேயே கொள்முதல் செய்து 24 மணி நேரத்தில் பொதுமக்களுக்குக் கொண்டு சேர்க்கும் நடைமுறையும் அண்மையில் கொண்டுவரப்பட்டுள்ளது.
முதல்வர் மருந்தகங்கள் நடத்தும் தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு சங்க மருந்தாளுனர்களுக்கு லாபத்தில் வழங்கப்பட்டு வந்த பங்குத்தொகையும் அதிகரிக்கப்பட்டு 75 சதவீதமாக தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
விடுமுறை தினங்களில் பணிபுரியும் மருந்தாளுனர்களுக்கு ரூபாய் 1000 வரை ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு முதல்வர் மருந்தகங்கள் சிறப்பாக செயல்பட எல்லா விதமான நடவடிக்கைகளையும் கூட்டுறவுத்துறை எடுத்து வருகின்றது. மேலும், மருந்து கட்டுப்பாட்டு விதிகளின் கீழ் சம்பந்தப்பட்ட துறையின் ஒப்புதல் இல்லாத பொருட்களை மருந்தகங்களில் வைத்து விற்பனை செய்ய இயலாது.
எனவே, பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பாக்கெட் உணவு வகைகள் விற்கப்படுவதாக கூறப்படும் செய்திகள் உண்மை இல்லை எனத் தெரிவித்துள்ளார்.