கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்கள வீரர்களால் அதிகளவில் பயன்படுத்தப்படும், பி.பி.இ. எனப்படும் தனிநபர் பாதுகாப்பு உடையில் இருந்து எரிபொருளை உருவாக்கலாம் என இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.
சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக மக்களின் இயல்பு வாழ்க்கையை மாற்றுப்பதைக்கு எடுத்து சென்றுள்ளது. உயிரிழப்புகள் என்பதையும் கடந்து பொருளாதாரம், வாழ்க்கைமுறை, மருத்துவ கழிவுகள் என வெவ்வேறு பிரச்சனைகளையும் உருவாக்கியுள்ளது. ஆட்கொல்லி நோயானா கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த குறிப்பிட்ட மருந்து ஏதும் இதுவரை கண்டறியப்படவில்லை. மாஸ்க் மற்றும் தனிமனித இடைவெளியை பின்பற்றுவது போன்ற நடவடிக்கைகள் மூலமே நோய்த்தொற்று பரவல் கட்டுப்படுத்த முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்
அதேபோன்று, கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கவும், சிகிச்சை அளிக்கவும், தனிநபர் பாதுகாப்பு உடைகள் பயன்படுத்தப்படுகின்றன. இது நேரடியாக பாலிபுரொபிலின் என்ற பிளாஸ்டிக் பொருள் மூலம் தயாரிக்கப்படுகிறது. இந்த உடையை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால், இதன் தேவை அதிகரித்து கழிவுளும் குவியத்தொடங்கியுள்ளது.
மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் என நோயாளிகளுடன் நேரடி தொடர்புகொண்டவர்கள் அதிகளவில் பயன்படுத்தும் இந்த உடைகளை அப்புறபடுத்துவதற்கு என சரியான வழிமுறைகள் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த உடைகள் மூலம் மற்றவருக்கும் நோய்த்தொற்று ஏற்படும் சூழல் உள்ளது. டெல்லியில், கடந்த மே மாதத்தில் நாள் ஒன்றிற்கு 25 டன் மருத்துவ கழிவுகள் உருவான நிலையில், கடந்த மாதத்தில் நாள் ஒன்றிற்கு 349 டன் மருத்துவகழிவுகள் உருவானது குறிப்பிடத்தக்கது.
அதிகரித்து வரும் மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்துவது என்பது பெரும் பிரச்சனையாக மாறி வருகிறது. இந்நிலையில், பி.பி.இ எனப்படும் கவச உடைகள் மூலம் பெட்ரோலுக்கு நிகரான எரிபொருளை உருவாக்க முடியும் என, இந்திய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி பல்கலைகழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இதை கண்டுபிடித்துள்ளனர்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில், பி.பி.இ எனப்படும் கவச உடைகளை, 300 முதல் 400 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில், ஆக்சிஜன் இல்லாமல், ‘பைராலிசிஸ்’ என்ற முறையில் ரசாயன மாற்றத்துக்கு உட்படுத்தலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம், உடையில் இருந்து சக்தி வாய்ந்த எரிபொருள் கிடைக்கும். பூமியில் கிடைக்கும் பெட்ரோலியத்தில் உள்ள அம்சங்கள் பல, இந்த எரிபொருளிலும் உள்ளது. இதன்வாயிலாக, பயன்படுத்தப்பட்ட கவச உடைகளை குப்பையில் வீசுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பையும் தவிர்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.