திரிபுராவில் புதிய நோயாளிகளை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து, பெண் மருத்துவர் மீது கொரோனா நோயாளிகள் எச்சில் துப்பி மிரட்டிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், மருத்துவர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் முன்கள வீரர்களாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். மக்களின் உயிரை காப்பாற்ற தங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்து வரும் அவர்களை, பலரும் தெய்வங்களாகவே கருதி வருகின்றனர். ஆனால், இந்த சூழலிலும் சிலர் மருத்துவர்களை அவமதிக்கும் செயலில் அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றனர்.
திரிபுரா மேற்கு மாவட்ட கொரோனா கண்காணிப்பு அதிகாரியாக இருப்பவர் மருத்துவர் சங்கீதா சக்ரபோர்த்தி. அங்குள்ள, பகத்சிங் இளைஞர் விடுதியில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா கேர் சென்டரில் புதிதாக பிறந்த குழந்தைகளுடன் கூடிய 5 பெண்களை அனுமதிப்பதற்காக அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது, ஏற்கனவே அங்கு அனுமதிக்கப்பட்டு இருந்த கொரோனா நோயாளிகள் சிலர் சங்கீதாவை தடுத்ததுடன், அங்கு ஏற்கனவே அதிக அளவில் நோயாளிகள் நிரம்பியுள்ளதாகவும், புதியதாக யாரையும் அனுமதிக்கக் கூடாது என்றும் கூறி எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அவர்களை சமாதானம் செய்ய அங்கு பணியாற்றி வரும் மருத்துவர்கள் முயற்சித்துள்ளனர். ஆனால், அவர்களை தகாத வார்த்தைகளால் பேசியதுடன், சங்கீதா மீது கொரோனா நோயாளிகள் எச்சில் துப்பி கொரோனா வைரசை பரப்பி விடுவோம் என்று அச்சுறுத்தலும் விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், கொரோனா நோயாளிகள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர். வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், குற்றச்சாட்டு கூறப்பட்டவர்களுக்கு தலா ரூ.30 ஆயிரம் பிணை தொகையுடன், விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடனும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ஆனால், இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த மாநில
உயர்நீதிமன்றம் ஜாமினை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து கொரோனா நோயாளிகள் 4 பேரும் போலீசில் சரணடைந்தனர்.