பெரு நிறுவனங்கள் பெற்றக் கடன்கள் முதல் தனிநபர் கடன்கள் வரை அனைத்துக் கடன் தவணைகளையும் மறுகட்டமைப்பு செய்யுமாறு வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா நோய் தொற்றின் காரணமாக நாடு தழுவிய பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தனிநபர் வேலை வாய்ப்பு முதல் பெரிய தொழிற்சாலைகள் வரை இந்த நெருக்கடியில் இருந்து தப்பவில்லை. இதனால் கடன் தவணைகள் கட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடன் தவணைகளை கட்ட ஆறு மாதங்கள் அவகாசம் வழங்கியது ரிசர்வ் வங்கி. அந்த அவகாசம் வரும் 31-ஆம் தேதியோடு முடியப்போகிறது. ஆனால் இயல்புநிலை இன்னும் திரும்பவில்லை.
எனவே வங்கிக் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு மீண்டும் கால அவகாசம் கிடைக்குமா என பொதுமக்கள் எதிபார்த்திருந்தனர். இந்த சூழலில் கடன் திட்டங்களை மறுகட்டமைப்பு (Restructuring) செய்யுமாறு வங்கிகளை ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. இந்த மறு கட்டமைப்பு தனிநபர் கடன்கள், வாகனக் கடன்கள் தொடங்கி ஹோட்டல்கள், சொகுசு விடுதிகள், சிமெண்ட் ஆலைகள், விமான நிறுவனங்கள் வரை பொருந்தும். பொது முடக்கம் மற்றும் தேவைக் குறைவு போன்றக் காரணங்களால் பரிவர்த்தனைகள் இல்லாமல் போனதால் அனைத்து நிறுவனங்களுமே பொருளாதார தேக்கநிலையில் உள்ளதால் ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக பிரபல வங்கியியல் நிபுணர் கே.வி. காமத் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் பரிந்துரைப்படி வங்கிகள் தங்கள் கடன் மறுகட்டமைப்புத் திட்டங்களை வகுத்துக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
வீட்டுக்கடன்களை பொருத்தவரை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள சலுகைக் கால அவகாசம் 31-ஆம் தேதி முடிவடையும் நிலையில், நிதி நிறுவனங்கள் தவணை வசூல் தொடர்பாக இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. எனவே வாடிக்கையாளர்கள் தங்கள் நிதி நிறுவனங்கள் முடிவெடுக்கும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. கடன் மறுகட்டமைப்புத் திட்டத்தில் தவணைத் தொகைகளை சிறிதளவு குறைப்பது, தவணைக் காலத்தை மேலும் கூட்டுவது போன்ற சலுகைகள் அறிவிக்கப்படலாம். ஆனால் மொத்த தவணை நீட்டிப்பு இரண்டு ஆண்டுகளை தாண்டக்கூடாது என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. மார்ச் மாதத்திற்கு முன்பு வரை தவணை சரியாக கட்டாமல் வங்கியின் நடவடிக்கைகளுக்கு உள்ளான வாடிக்கையாளர்கள் கடன் மறுகட்டமைப்பு திட்ட சலுகைகளைப் பெற முடியாது. ரிசர்வ் வங்கியின் இந்த திட்டம் கடன் பெற்றவர்களை கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விடவைத்துள்ளது.
கடந்த 2008-ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையின் போது, இது போன்ற சலுகைத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதன் பிறகு இப்போதுதான் இது போன்ற சலுகைகள் அறிவிக்கப்படுகின்றன.
சுரா