ஜப்பான் வங்கியிடம் ஒப்பந்தம் கையெழுத்தான பின்பு, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட விரைவில் நிதி ஒதுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் கொரோனா தடுப்புப் பணிகள் தொடர்பான ஆய்வு நிறைவடைந்த பிறகு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டார். அப்போது, அவர் பேசியதாவது,
மதுரை மாவட்டத்தில் கொரோனா முதலில் குறைவாக இருந்தது. ஆனால், படிப்படியாக உயர்ந்து, மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக தற்போது கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக, தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று படிப்படியாகக் குறையத் தொடங்கியிருக்கிறது. மதுரை மாவட்டத்தில் சற்று அதிகமாக இருந்ததை குறைப்பதற்கு சுகாதாரத்துறை, உள்ளாட்சி துறை மூலம் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக தற்போது குறைந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் நாள் ஒன்றிற்கு 124 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன.
மாநகராட்சிப் பகுதிகளில் மட்டும் இதுவரை சுமார் 4,000 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன, புறநகரில் சுமார் 8,000 காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டிருகின்றன. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளொன்றுக்கு 400-ஆக இருந்தது படிப்படியாகக் குறைந்து, தற்பொழுது 200க்கும் கீழ் உள்ளது.
இந்த நோய் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து எடுத்து வந்தாலும், பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு மிக, மிக அவசியம். பொதுமக்களுடைய ஒத்துழைப்பிற்கேற்ப இந்த நோயின் தாக்கம் குறையும். நோய் பரவாமல் தடுப்பதற்கும் ஏதுவாக இருக்கும். தமிழகத்தில் மதுரை மாநகரத்திலும், புறநகர்ப் பகுதிகளும் இத்தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
மதுரை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரூபாய் 150 கோடி மதிப்பீட்டில் 350 படுக்கை வசதிகளுடன் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. மதுரை தென் மாவட்டங்களின் தலைநகரமாக விளங்குகிறது. பாரத பிரதமர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். அந்தப் பணிகளும் விரைவில் தொடங்கவுள்ளது. ஜப்பான் பன்னாட்டு வங்கியிடம் நிதி உதவி கோரப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகி, நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற செய்தி மத்திய அரசிடமிருந்து கிடைக்கப் பெற்றிருக்கிறது.
கேன்சரால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்கள் தனியார் மருத்துவமனைகளில் அதிகக் கட்டணத்தில் சிகிச்சை பெற இயலாத காரணத்தால், குறைந்த கட்டணத்தில் உரிய சிகிச்சை அளிப்பதற்கு மதுரை அரசு மருத்துவமனையில் ரூபாய் 20 கோடியில் உபகரணங்கள், ரூபாய் 5 கோடியில் கட்டடம், என மொத்தம் ரூபாய் 25 கோடி மதிப்பீட்டில் புற்றுநோய் சிகிச்சை கட்டுப்படுத்தும் மையம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இன்னும் 20 நாட்களில் அந்தப் பணி நிறைவு பெறும்.
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்கின்ற திட்டங்களையெல்லாம் அரசு நிறைவேற்றி வருகிறது. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் விதமாகவும், பொருளாதாரம் மேம்பாடு அடைய வேண்டும் என்பதற்காகவும் பல தொழிற்சாலைகளை துவங்கி, ஆயிரக்கணக்கானவர்கள் பணிபுரிகின்ற சூழ்நிலையை அரசு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
கோடைக் காலத்தில் அனைவருக்கும் தேவையான நீர் கிடைப்பதற்கு அரசு வழிவகை செய்திருக்கிறது. மதுரை மாவட்ட அமைச்சர்கள் இருவரும் இரவு, பகல் பாராமல் கொரோனா தடுப்புப் பணியில் மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். அம்மா கிச்சன் உருவாக்கப்பட்டு, சத்தான உணவுகள் கொரோனாவால் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கப்படுவது பெருமைக்குரியது. அதற்கு அமைச்சர்களை பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன் என அவர் பேசினார்.