இந்திய, சீன ராணுவ தளபதிகள் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருக்கின்றனர்.
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் எல்லைப் பிரச்சினை நீடித்து வரும் நிலையில் பிரச்சினையை தீர்க்க இருதரப்பு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சீனாவும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்திய, சீன மூத்த ராணுவ தளபதிகள் நாளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். கிழக்கு லடாக்கில் இருக்கும் சுஷுல் என்ற இடத்தில் இந்த சந்திப்பு நடைபெறவிருக்கிறது. இது இருநாட்டு ராணுவ அதிகாரிகளும் நடத்தும் நான்காவது பேச்சுவார்த்தையாகும்.
இதற்கு முன் நடைபெற்ற பேச்சுவார்த்தைககளுக்கு பின்னர் சில இடங்களில் இரு ராணுவங்களும் விலக்கிக்கொள்ளப்பட்டன. இன்றை சந்திப்பில், ஃபிங்கர் ஏரியா, தெப்சங் ஆகிய இடங்களில் பதற்றத்தை தணிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சந்திப்பில், படிப்படியாக ஆயுதங்களையும், உபகரணங்களையும் விலக்கிக்கொள்வது, பரஸ்பர ஒப்புதலின்படி ஒப்புக்கொண்ட தொலைவிற்கு நகருவது, ஏப்ரல் மாதத்திற்கு முன்பிருந்த நிலையை எல்லையில் மீண்டும் நிலைநாட்டுவது ஆகியவை பற்றி இரு நாட்டு ராணுவ தளபதிகளும் ஆலோசிக்கவிருக்கின்றனர்.
இதற்கு முன் ஜூன் 30ஆம் தேதியன்று சீன எல்லைக்குள் இருக்கும் மோல்டோ பகுதியில் இரு நாட்டு தளபதிகளும் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் இந்திய தரப்பில் 14ஆம் படைத்தளபதி ஹரிந்தர் தலைமையிலான இந்திய குழுவும், ஷிஞ்சியாங் ராணுவ மண்டலத் தளபதி ஜெனரல் லியு லின் தலைமையிலான சீன குழுவும் பங்கேற்றது.
இதில், கல்வான் பள்ளத்தாக்கு, ஃபிங்கர் ஏரியா, ஹாட் ஸ்ப்ரிங்ஸ், கோக்ரா, தெப்சங் ஆகிய இடங்களில் படைகளை விலக்கும்படி இந்திய தரப்பு கோரியது. அதன்படி படைகள் படிப்படியாக விலக்கப்பட்டது. இதன் அடுத்தகட்டமாக இன்றைய சந்திப்பு நடைபெறவிருக்கிறது. இதன்பின் கூடுதல் இடங்களில் படைகள் விலக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.