யூரோப்பியன் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து காலிறுதி போட்டியில், பார்சிலோனாவை வீழ்த்தி பேயர்ன் முனிச் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
யூரோப்பியன் சாம்பியன்ஸ் லீக்கின் காலிறுதி ஆட்டம், போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பனில், இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்றது.இதில் ஸ்பெயின் நாட்டின் ஜாம்பவானான பார்சிலோனாவை, ஜெர்மனியின் பேயர்ன் முனிச் அணி எதிர்கொண்டது.
போட்டி தொடங்கிய 4-வது நிமிடத்திலேயே பேயர்ன் முனிச் அணியின் தாமஸ் முல்லர், தனது அணிக்கான முதல் கோலை பதிவு செய்தார். 7-வது நிமிடத்தில் பார்சிலோனாவுக்கு செல்ஃப் கோல் மூலம் ஒரு கோல் கிடைத்தது. இதனால் இரு அணிகளும் 1-1 என சமநிலையைப் பெற்றன.
அடுத்ததாக, பேயர்ன் முனிச் அணியின் இவான் பெரிசிக் 21-வது நிமிடத்தில் ஒரு கோலும், 27-வது நிமிடத்தில் அதே அணியைச் சேர்ந்த செர்ஜ் காப்ரி ஒரு கோலும் அடித்தனர்.பரபரப்பாக சென்றுக் கொண்டிருந்த ஆட்டத்தின் 31-வது நிமிடத்தில் தாமஸ் முல்லர் மேலும் ஒரு கோல் அடிக்க, முதல் பாதியின் இறுதியில் பேயர்ன் முனிச் 4-1 என முன்னிலைப் பெற்றது.
செகண்ட் ஹாப்-ன் 57-வது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் லூயிஸ் சுவாரஸ் ஒரு கோல் அடித்தார்.ஆட்டத்தின் 63-வது நிமிடத்தில் பேயர்ன் முனிச்சின் ஜோசுவா கிம்மிச்சும், 82-வது நிமிடத்தில் ராபர்ட் லெவன்டாஸ்கியும் கோல் அடித்து தங்களது அணிக்கு பலத்தை சேர்த்தனர்.பேயர்ன் முனிச் அணி வீரர்களின் அபாரமான ஆட்டத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் பார்சிலோனா அணி திணறியது.
அடுத்தடுத்து கோல் மழை பொழிந்துக் கொண்டிருந்த நிலையில், பார்சிலோனா அணியில் இருந்து பேயர்ன் முனிச் அணிக்கு சென்ற பிலிப்பே கவுட்டினோ 85-வது நிமிடத்தில் ஒரு கோலும், 89-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோலும் அடிக்க பேயர்ன் முனிச் 8-2 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது.
ஆட்டத்தின் இறுதியில், பேயர்ன் முனிச் 8-2 என்ற கோல் கணக்கில் பார்சிலோனாவை வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
மெஸ்சி தலைமையிலான பார்சிலோனா அணிக்கு இது மிகப்பெரிய தோல்வியாகும். மேலும், கால்பந்து வரலாற்றில் இதுபோன்ற மோசமான தோல்வியை மெஸ்சி சந்தித்தது கிடையாது எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.பார்சிலோனா அணி காலிறுதியில் தோல்வி அடைந்ததால் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
2005 முதல், சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில், மெஸ்ஸி அல்லது ரொனால்டோ அணிகள் இடம் பெறாதது இதுவே முதல்முறை, என்பது குறிப்பிடத்தக்கது.