இந்தியாவின் 11 நகரங்களில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம், புதியதாக சார்ஜிங் மையங்களை திறந்துள்ளதாக அறிவித்து உள்ளது.

சுற்றுச்சூழல் மாசுபாட்டை கருத்தில் கொண்டு, எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பல முன்னணி மோட்டார் நிறுவனங்களும், போட்டி போட்டுக்கொண்டு புதுப்புது மாடல்களில் பல்வேறு அம்சங்களுடன் எலெக்ட்ரிக் வாகனங்களை வெளியிட்டு வருகின்றன.
எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ள அதேசமயம், அதற்கான உட்கட்டமைப்பு என்பது கேள்விக்குறி ஆகி உள்ளது. வீடுகளில் வாகனங்களை சார்ஜ் செய்யும் அளவுக்கான வசதிகள் இந்தியாவில் இன்னும் நிறைவடையவில்லை.
அந்த வகையில், எத்தர் எனர்ஜி நிறுவனம் பொது சார்ஜிங் வசதிகளை நாடு முழுவதும் வழங்கி வருகிறது. இதுவரை சுமார் 100 இடங்களில் சார்ஜிங் வசதிகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த சேவை மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.

அந்த வகையில், ஏத்தர் எனர்ஜி நிறுவனம் 9 புதிய சந்தைகளில் ஏத்தர் க்ரிட் பொது பாஸ்ட் சார்ஜிங் மையங்களை திறந்துள்ளது. அதில், 37 பாஸ்ட் சார்ஜிங் மையங்கல் பெங்களூருவிலும், 13 பாஸ்ட் சார்ஜிங் மையங்கள் சென்னையிலும் திறக்கப்பட்டு உள்ளன.
புதிய சார்ஜிங் மையங்களை சேர்க்கும் பட்சத்தில் ஏத்தர் எனர்ஜி இந்தியா முழுக்க மொத்தம் 150 பாஸ்ட் சார்ஜிங் மையங்களை கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நிறுவனங்களில் முதன்மையான ஒன்றாக ஏத்தர் இருக்கிறது.
பிரீமியம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகம் செய்வதோடு, இவற்றுக்கு தேவையான உள்கட்டமைப்புகளையும் ஏத்தர் எனர்ஜி தொடர்ந்து வழங்கி வருகிறது. ஏத்தர் க்ரிட் பாஸ்ட் சார்ஜிங் நெட்வொர்க்குகளில் அனைத்து எலெக்ட்ரிக் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.