பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது பல்சர் பைக் மாடல்களை, வாடிக்கையாளர்களை கவரும் விதமாக புதிய நிறங்களில் அறிமுகம் செய்துள்ளது.

பஜாஜ் நிறுவனத்தின் அதிகம் விற்பனை ஆகும் பைக் மாடல்களில் பல்சர் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. இந்நிலையில், வாடிக்கையாளர்களுக்கு புது அம்சங்களை வழங்கும் விதமாக, குறிப்பிட்ட சில மாடல்கள் கூடுதல் நிறங்களுடன் சந்தைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
அதன்படி, அந்த சீரிசில் உள்ள பல்சர் என்எஸ்160, என்எஸ்200 மற்றும் ஆர்எஸ்200 ஆகிய மாடல்களில் புதிய பாடி கிராபிக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

இதில் 160சிசி மாடல் விலை ரூ.1.08 லட்சம், என்எஸ்200 மற்றும் ஆர்எஸ்200 மாடல்கள் விலை முறையே ரூ. 1.31 லட்சம் மற்றும் ரூ. 1.52 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
பல்சர் பைக்குகள் தற்சமயம் – பர்ன்ட் ரெட் (மேட் பினிஷ்) மற்றும் பிளாஸ்மா புளூ (சேடின் பினிஷ்) என இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கின்றன. இத்துடன் இவற்றில் வெள்ளை நிற அலாய் சக்கரங்களும் வழங்கப்படுகிறது. இதன் பென்டர்கள் கார்பன் பைபர் பினிஷ் செய்யப்பட்டுள்ளன.

புதிய நிறம் தவிர இந்த மோட்டார்சைக்கிள்களில் வேறு எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. தற்சமயம் இவை காஸ்மெடிக் மாற்றங்களை பெற்று இருக்கின்றன. அந்த வகையில் இவற்றின் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை.




