கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்னிவல் மாடல் கார் விற்பனையை ஊக்குவிக்க அதிரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஊரடங்குக்குப் பிறகு ஆட்டோமொபைல் துறை இயல்புநிலைக்கு திரும்பினாலும், விற்பனை இன்னும் முழு வீச்சில் தொடங்கவில்லை. இந்த சூழலில் விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக, பல நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன.
சமீபத்தில், ரெனால்ட், கவாசகி ஆகிய நிறுவனங்களும் பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்து இருந்தன.
அந்த வரிசையில், கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட விற்பனையாளர்கள் கார்னிவல் எம்பிவி மாடலுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகின்றனர். இவை எக்சேன்ஜ் போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி, ஏஎம்சி பேக் மற்றும் அக்சஸரீஸ் உள்ளிட்டவைகளாக வழங்கப்படுகின்றன.
ரூ.24.95 லட்சம் மதிப்பு கொண்ட கியா கார்னிவல் வாங்குவோருக்கு ரூ. 80 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 40 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி, மூன்று ஆண்டுகளுக்கு ஏஎம்சி சலுகை, பின்புற இருக்கைகளில் என்டர்டெயின்மென்ட் பேக்கேஜ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
அதேசமயம், கியா செல்டோஸ் மற்றும் சொனெட் மாடல்களுக்கு எவ்வித தள்ளுபடியும் வழங்கப்படவில்லை. கியா சொனெட் மாடல் கடந்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் துவக்க விலை ரூ. 6.71 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.