டிரையம்ப் நிறுவனத்தின் புதிய டிரைடென்ட் மாடல் பைக்கின் விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.
புதிய டிரைடென்ட் மோட்டார்சைக்கிள் டிரையம்ப் நிறுவனத்தின் குறைந்த விலை மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக டிரைடென்ட் மாடல் கான்செப்ட் வடிவில் காட்சிக்கு வைக்கப்பட்ட நிலையில், இந்த மாடல் ஸ்டிரீட் டுவின் மாடலின் கீழ் நிலைநிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் டிரைடென்ட் மாடல் மோட்டார்சைக்கிளை சர்வதேச சந்தையில் அக்டோபர் 30 ஆம் தேதி அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது. ஆனாலும், புதிய டிரைடென்ட் மாடல் பற்றி இதுவரை எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
சமீபத்தில் இந்த மோட்டார்சைக்கிளின் புரொடக்கசன் ரெடி மாடல் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தன.
இந்த சூழலில், டிரையம்ப் நிறுவனத்தின் புதிய டிரைடென்ட் மாடல் அறிமுக விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.
அதன்படி, 2020 ஸ்டிரீட் டிரிபில் எஸ் மாடலிலும் வழங்கப்பட்டு இருந்த, 660சிசி இன்-லைன் 3 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
இது 95 பிஹெச்பி பவர், 66 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. டிரைடென்ட் மாடலிலும் இதே செயல்திறன் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.