மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் இருந்து, 40 ஆயிரம் கார்களை திரும்ப பெறுவதாக அறிவித்து உள்ளது.

மாருதி சுசுகி நிறுவனத்தின் இகோ எம்பிவி மாடல் கார் இந்திய சந்தையில் அறிமுக முதலே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குடும்பத்துடன் பயணிப்பதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதால், இந்திய சந்தையில் இந்த காருக்கு அமோக வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில், இந்த காரில் செய்ய உள்ள சிறிய மாற்றம் காரணமாக, சுசுகி நிறுவனம் மாஸ் ரீகால் அழைப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஹெட்லேம்ப் யூனிட்டில் ஸ்டான்டர்டு லோகோ இல்லாததே இதற்கான காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது.
ஹெட்லேம்ப்பில் இதுவரை எவ்வித கோளாறும் ஏற்படல்லை என்றாலும், முன்னெச்சரிக்கையாக சிறு மாற்றம் செய்வதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 4, 2019 முதல் பிப்ரவரி 25, 2020 வரையிலான காலக்கட்டங்களில் உற்பத்தி செய்யப்பட்ட மாடல்கள் திரும்ப பெறப்படுவதாக சுசுகி நிறுவனம் அறிவித்துள்ளது.

தற்போதைய தகவல்களின் படி, இந்திய சந்தையில் இருந்து மொத்தம் 40,453 இகோ எம்பிவி கார்களை மாருதி சுசுகி திரும்ப பெறுகிறது. ரீகால் செய்யப்படும் வாகனங்கள் அனைத்தும் இலவசமாக சரி செய்து தரப்படுகிறது.
ரீகால் செய்யப்பட வேண்டிய கார்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களை மாருதி சுசுகி நிறுவனம் தொடர்பு கொள்ளும். அறிவுறுத்தலின்படி, வாடிக்கையாளர்கள் அருகாமையில் உள்ள அதிகாரப்பூர்வ விற்பனை மையங்களுக்கு சென்று வாகனங்களை சரிசெய்து திரும்ப பெறலாம்.




