ரெனால்ட் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு ரூ. 70 ஆயிரம் வரையிலான சலுகைகளை அறிவித்து உள்ளது.

கொரோனா ஊரடங்கு தளர்வுகளைத் தொடர்ந்து, ஆட்டோமொபைல் துறை சற்று மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியுள்ளது. அதேசமயம், வாடிக்கையாளர்களை கவரும் விதமாக பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, அடுத்த 3 மாதம் இந்தியாவில் பண்டிகை மாதங்கள் என்பதால், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பல்வேறு அதிரடி சலுகைகளை வழங்க திட்டமிட்டுள்ளன.
அந்த வகையில், ரெனால்ட் நிறுவனம் பண்டிகை காலத்தை முன்னிட்டு தனது வாகனங்களுக்கு தள்ளுபடி, பலன்கள் மற்றும் விசேஷ சலுகைகளை அறிவித்து உள்ளது. இந்த சலுகைகள் ரெனால்ட் க்விட், டிரைபர் மற்றும் டஸ்டர் போன்ற மாடல்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.

மூன்று மாடல்களுக்கும் கேஷ்பேக் சலுகைகள், பலன்கள், லாயல்டி போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு கார் மாடல் மற்றும் வேரியண்ட்களுக்கு ஏற்ப அதிகபட்சம் ரூ. 70 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.
அந்த வரிசையில் என்ட்ரி-லெவல் க்விட் மாடலுக்கு ரூ. 40 ஆயிரம் மதிப்புள்ள சலுகைகளும், ரெனால்ட் டிரைபர் மாடலுக்கு ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள பலன்களும், ரெனால்ட் டஸ்டர் மாடலுக்கு ரூ. 70 ஆயிரம் மதிப்புள்ள பலன்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.




