ரெனால்ட் நிறுவனத்தின் புதிய கைகர் மாடல் காரை, இந்திய சந்தையில் வெளியிடும் திட்டத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

ரெனால்ட் நிறுவனம் தனது காம்பேக்ட் எஸ்யுவி பிரிவை சேர்ந்த கைகர் மாடல் கார், இந்த ஆண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால், கொரோனா பரவலால் காரை விநியோகம் செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக, கைகர் மாடல் காரின் இந்திய வெளியீடு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தான் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

வெளியீட்டிற்கு முன் புதிய கைகர் மாடல் காரின் ஸ்பை படங்கள் இணையத்தில் கசிந்து உள்ளது. அதன்படி புதிய காரின் வெளிப்புறம் கிளாம்ஷெல் பொனெட், பெரிய வீல் ஆர்ச்கள், குறைந்த உயரம் கொண்டுள்ளது. இத்துடன் இரண்டடுக்கு முகப்பு விளக்கு மற்றும் மூன்று ப்ரோஜக்டர் ஹெட்லைட்கள் வழங்கப்பட்டுள்ளது.

காரின் உள்புறம் ரெனால்ட் டிரைபர் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என்றும் இதில் சில உயர்ரக பொருட்கள் மற்றும் அம்சங்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

புதிய ரெனால்ட் கைகர் மாடலில் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் பெட்ரோல் மோட்டார் வழங்கப்படுகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. எதிர்காலத்தில் இந்த மாடல் ஏஎம்டி மற்றும் சிவிடி போன்ற அம்சங்களை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.



