ஊரடங்கினால் வேலையிழப்பு, சம்பள குறைப்பு போன்றவற்றால் ஏப்ரல் தொடங்கி ஜூலை வரையிலான நான்கு மாதங்களில் ரூ.30 ஆயிரம் கோடியை பி.எப்., கணக்கிலிருந்து மக்கள் வெளியே எடுத்துள்ளனர்.
வருங்கால வைப்பு நிதி நிறுவனம் 6 கோடி சம்பளதாரர்கள் மற்றும் அவர்களது நிறுவனங்களிடமிருந்து கட்டாய பங்களிப்பின் மூலம் பெறப்பட்ட ரூ.10 லட்சம் கோடி நிதியை நிர்வகிக்கிறது. தொற்றுநோய் பரவுவதை கட்டுப்படுத்த மார்ச் மாத இறுதியில் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கொரோனா சூழலால் பி.எப்., கணக்கிலிருந்து எளிதில் பணம் எடுக்கும் திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இந்த நிலையில் ஏப்ரல் தொடங்கி ஜூலை மூன்றாம் வாரம் வரையிலான இடைப்பட்ட காலத்தில் 80 லட்சம் சந்தாதாரர்கள் ரூ.30 ஆயிரம் கோடி பணத்தை வெளியே எடுத்துள்ளனர். மிகப்பெரிய அளவில் நிதி வெளியே சென்றிருப்பது 2021 நிதியாண்டின் வருவாயை பாதிக்கும். கொரோனா பாதிப்பு உயர்ந்து வருவதால், திரும்பப் பெறுவோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. தற்போதைய போக்கு தொடர்ந்தால் வரவிருக்கும் நாட்களில் கிட்டத்தட்ட ஒரு கோடி சந்தாதாரர்கள் சேமிப்பிலிருந்து விலகுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது எடுக்கப்பட்டுள்ள பணத்தில், 30 லட்சம் பேர் கொரோனா சூழலால் ரூ.8000 கோடியை திரும்ப பெற்றதாகவும், மீதம் ரூ.22,000 கோடியை 50 லட்சம் பேர் பொதுவான காரணங்கள் கூறி பெற்றிருப்பதாகவும் பிஎப் நிறுவனம் அறிவித்துள்ளது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree