ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்கில் பணம் டெபாசிட் பண்ணும்போது, குறிப்பிட்ட அளவிற்கு மேல் பணம் டெபாசிட் செய்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என்று வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தனியார் துறை வங்கிகளில் மிகப் பெரிய வங்கிகளில் ஒன்றான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, பணம் டெபாசிட் செய்யும் எந்திரங்களில் பணம் போடுபவர்கள் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் பணம் டெபாசிட் செய்யும் போது, டெபாசிட் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும் என்று விதிமுறைகளை மாற்றி அமைத்துள்ளது. இந்த விதிமுறை நவம்பர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
அதன்படி, ஒரு மாதத்தில் அதிகபட்சமாக ஒரே முறையில் ரூ.10,000 டெபாசிட் செய்தாலோ அல்லது ஒரு மாதத்தில் சிறிது சிறிதாக ரூ.10,000 வரை டெபாசிட் செய்தாலோ கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி தெரிவித்துள்ளது.
எனினும் ஒரு சில விதி விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மூத்த குடிமக்கள், அடிப்படை சேமிப்புக் கணக்குகள், ஜன் தன் கணக்குகள், மாற்றுத் திறனாளிகளுக்கான கணக்குகள் மற்றும் ஸ்டூடண்ட்ஸ் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் போன்ற கணக்குகளுக்கு இந்த விதிமுறையிலிருந்து விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுகுறித்த அனைத்து விவரங்களையும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்று வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் இந்த திடீர் அறிவிப்பால், வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.