சென்னையில் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது வாகன ஓட்டிகளுக்கு கவலையளிக்கும் வகையில் உள்ளது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை மாறுதலுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினம் தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.
அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தினமும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில், தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமல்படுத்தப்பட்டது. அதனால் விலை 97 ரூபாய் என்ற அளவில் இருந்து வந்தது.
இருப்பினும் தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர். சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 21 காசுகள் உயர்ந்து 99.36 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் அதிகரித்து 94.45 ரூபாய்க்கும் விற்பனையானது.
இந்நிலையில் தொடர்ந்து 2வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரொல் விலை 22 காசுகள் உயர்ந்து ரூ.99.58க்கு விற்பனையாகிறது. மீண்டும் சென்னையில் சதமடிக்க பெட்ரோல் விலை காத்திருக்கிறது. அதே சமயம் ஒரு லிட்டர் டீசலின் விலை 29 காசுகள் அதிகரித்து ரூ.94.74க்கு விற்பனையாகி வருகிறது.




