கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் தொழில், வர்த்தகம் முடங்கியதால் சொந்தமாக வீடு வாங்குபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது இதனால் அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகளின் விற்பனை கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. பல்லாயிரக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டு விற்கப்படாமல் அப்படியே தேங்கி உள்ளன.
இத்தகைய வீடுகளை விற்பனை செய்ய ஏதுவாக மத்திய அரசு ஒரு சலுகை அறிவிப்பு ஒன்றை நேற்று வெளியிட்டது.
அதன்படி ரூபாய் .2 கோடி வரையில் மதிப்புள்ள வீடுகளின் முதல் விற்பனையை வழிகாட்டு மதிப்பீட்டு விலைக்கு 20 சதவீதம் குறைவான விலையில் விற்பனை செய்ய அனுமதித்து வருமான வரி சட்ட விதிகள் தளர்த்தப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
இதுவரை அரசின் வழிகாட்டு மதிப்பீட்டு விலைக்கும், விற்பனை விலைக்கும் இடையே 10 சதவீத வித்தியாசம் மட்டுமே சட்டப்படி அனுமதிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், ரியல் எஸ்டேட் துறைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், ரூ.2 கோடி வரை மதிப்புள்ள வீடுகளின் முதல் விற்பனைக்கு இந்த வித்தியாசம் 20 சதவீத அளவுக்கு தளர்த்தப்படுகின்றது. இது அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 30-ந்தேதி வரையில் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறும்போது, “இந்த நடவடிக்கையால் வீடு வாங்குபவர்கள், வீட்டு வசதி நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகள் குறையும். விற்கப்படாத வீடுகளை விரைவில் விற்க இது உதவும்” என குறிப்பிட்டுள்ளார்.