ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமிருக்காது எனவும், ரெப்போ வட்டி விகிதம் 4 சதவிகிதமாகவே தொடரும் எனவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
வட்டி விகிதங்களில் மாற்றம் குறித்து இரு மாதங்களுக்கு ஒருமுறை நிதிக்கொள்கைக் குழு கூட்டம் நடைபெறும். இதன்படி மத்திய ரிசர்வ் வங்கி, 2020-ம் ஆண்டில், தன்னுடைய நான்காவது பணக் கொள்கைக் குழு (Monetary Policy Committee) கூட்டத்தில், ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றாமல் இருக்க, குழு ஒருமனதாக தீர்மானம் எடுத்துள்ளது.
இதனை தொடர்ந்து, மும்பையில் ஆர்.பி.ஐ. நிதிக்கொள்கை ஆய்வு முடிவுகளை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார். இதுகுறித்து அவர் கூறும்போது, நடப்பு நிதியாண்டு மற்றும் அடுத்த ஆண்டு வரை, ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது எனவும், ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீகிதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ ரேட் விகிதம் 3.35 சதவீகிதமாகவும் தொடரும் என்றும் அறிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் பொருளாதாரம் நம்பிக்கையின் பாதையை நோக்கி நகர்ந்துக் கொண்டிருப்பதால், வரும் 2021 ஜனவரி-மார்ச் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் எனவும், செப்டம்பர் மாதத்தில் உயர்ந்த பணவீக்க விகிதம் அக்டோபர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாத காலக்கட்டத்தில் படிப்படியாக குறையும் என சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
ரெப்போ ரேட் என்பது, ஆர்.பி.ஐ. மற்ற வங்கிகளுக்கு கொடுக்கும் பணத்துக்கு வசூலிக்கும் வட்டி விகிதம் ஆகும். ரெப்போ ரேட் குறையும்போது, வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமும் குறையும். இதுவே மற்ற வங்கிகள், ஆர்.பி.ஐ.க்கு கொடுக்கும் பணத்துக்கு வசூலிக்கும் வட்டி தான் ரிவர்ஸ் ரெப்போ ரேட் ஆகும். எனவே ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என ஆர்.பி.ஐ. அறிவித்துள்ள செய்தி, வாடிக்கையாளர்களுக்கு சற்றே நிம்மதி தருவதாக அமைந்துள்ளது.