தங்கத்திற்கான 15% இறக்குமதி வரியை ரத்து செய்வதாக, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே வெளியிட்டுள்ள அறிவிப்பால், இலங்கையில் தங்கத்தின் விலை மிகப்பெரிய அளவில் குறைவதற்கான சாத்தியம் ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் 1971ஆம் ஆண்டு முதல் தங்கம் மற்றும் ஆபரணக் கைத்தொழிலுக்கு வழங்கப்பட்டிருந்த வரிச் சலுகை, 2017ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வருமான வரிக் கொள்கையில் நீக்கப்பட்டது.
மேலும், 2018ஆம் ஆண்டு இறக்குமதி தங்கத்தின் மீது 15% வரி விதிக்கப்பட்டது, இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்திருந்தது எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தங்கத்தின் மீதான 15 சதவீத இறக்குமதி வரியை நீக்குமாறு அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னதான நிலவரத்தின்படி, ஒரு சவரன் தங்கத்தின் விலை இலங்கையில் ஒரு லட்சம் ரூபாய் வரை பதிவாகியிருந்தது.
இந்நிலையில், 15 சதவீத இறக்குமதி வரியை ரத்து செய்யும் அறிவிப்பு வெளியான நிலையில், 15 சதவீத சலுகையை தங்க நுகர்வோருக்கு வழங்க வேண்டிய கட்டாயத்துக்கு தங்க விற்பனையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
அவ்வாறு 15 சதவீத சலுகை வழங்கப்படுவதாக இருந்தால், சவர ஒரு லட்சம் ரூபாய் அளவுக்கு விற்பனை செய்யப்படும் தங்கம், ரூபாய் 85,000-ற்க்கு விற்பனை செய்யப்பட வேண்டும்.
எனினும், ஏற்கனவே 15 சதவீத இறக்குமதி வரியை செலுத்தியே தங்கத்தை கொள்வனவு செய்துள்ள வர்த்தகர்கள், அரசாங்கத்தின் அறிவிப்பை உடனடியாக நடைமுறைப்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக இலங்கை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.