பாலியல் கொடுமை போன்ற பல்வேறு குற்றவழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக இருப்பவர் நித்தியானந்தா. தனக்கென கைலாசா என்ற நாட்டை உருவாக்கிக் கொண்டு தனது பக்தர்களோடு அங்கு குடியிருப்பதாக அவரே வீடியோ மூலம் கூறிவருகிறார்.
அவ்வப்போது வீடியோ மூலம் தலைகாட்டி நெட்டிசன்களுக்கு கண்டண்ட் கொடுத்துச் செல்லும் நித்தியானந்தா நேற்றிரவு பத்து மணிக்குத் தன்னுடைய பக்தர்களுக்கு நேரலையில் காட்சியளித்தார். வந்தவர் அதிர்ச்சியான விஷயத்தைச் சொல்லிவிட்டு சென்றுள்ளார்.
“இந்தியா, மலேசியா, நேபாளம், இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு யாரும் செல்ல வேண்டாம். இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் வேறு இடங்களில் இருந்தால் அங்கேயே சில காலம் இருங்கள். என்னுடைய பக்தர்கள் இப்போது எந்த நாட்டில் இருக்கிறீர்களோ அங்கேயே இருங்கள். இந்த நாடுகளில் இருப்பவர்கள் முடிந்தால் வேறு இடங்களுக்குச் செல்லுங்கள். பிரளயம் முடிந்து அனைத்தும் அடங்கும்வரை இந்த நாட்டுக்குள் யாரும் செல்ல வேண்டாம்.
உயிரோடு வாழ்வதே இந்த ஆண்டின் உச்ச நன்மையும், சுகமும். வரமும். வாழ்க்கை என்பது வரவு. மரணம் என்பது செலவு. இந்த ஆண்டின் நல்ல வரவேற்பு நம்மை காத்துக்கொள்வதுதான்” என்று பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
சென்னையில் நில அதிர்வு உணரப்பட்ட ஓரிரு நாள்களில் நித்தியானந்தா பிரளயம் வரும் என எச்சரிக்கை விடுத்துள்ளாரே உண்மையில் ஏதேனும் நிகழ்ந்துவிடுமோ என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். வேறு சிலரோ இதையும் மீம்ஸாக மாற்ற டெம்ப்ளேட் தேடிக் கொண்டிருக்கின்றனர்.
முன்னதாக நித்தியானந்தா இந்தியா, மலேசியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் கைலாசாவுக்கு வர வேண்டாம் என்று கூறியிருந்ந்தது குறிப்பிடத்தக்கது.