புதிய திரைப்படத்தில் நடிக்கப் போகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்… தயாரான மூன்று இயக்குனர்கள்!!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வந்த திரைப்படம் அண்ணாத்த. இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இதுவரை உலகம் முழுவதும் 200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்து இருப்பதாக தயாரிப்பு மற்றும் படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் ரஜினிகாந்த் புதிய படத்தில் நடிக்க தயாராகும் படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதியில் தொடங்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகிஉள்ளது.
சமீபத்தில் ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். தற்போது பூரண குணமடைந்து உள்ள நிலையில் தன்னை அடுத்த படத்தில் நடிப்பதற்காக தயார்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.ரஜினிகாந்தின் புதிய படத்தை இயக்க போவது யார் என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு கோலிவுட் வட்டாரத்தில் நிலவிவருகிறது.ஏற்கனவே துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமியை அழைத்து ரஜினி பாராட்டி தனது கதை தயார் செய்யும்படி கூறியிருந்தார். எனவே அவரது இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. அதற்கான கதையை உருவாக்கும் முயற்சியில் அவர் இறங்கினார்.
பின்னர் டாக்டர், தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிப்பார் என்றும் பேசப்பட்டது. ஆனால் நெல்சன் பீஸ்ட் படப்பிடிப்பில் இருப்பதனால் ரஜினியின் திரைப்படத்தை உடனடியாக தொடங்குவது என்பது முடியாத காரியம் என்கிறார்கள்.
இதனை தொடர்ந்து பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் நடிப்பார் என்று மற்றொரு தகவலும் பரவி வருகிறது. ரஜினிகாந்தின் புதிய திரைப்படம் மற்றும் இயக்குனர் பற்றிய அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.