இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மைய கருவாக வைத்து உருவாக்கி உள்ள திரைப்படம் தான் ‘ஆதிபுருஷ்’. இத்திரைப்படத்தில் நடிகர்கள் பிரபாஸ், சைப் அலி கான், நடிகை கீர்த்தி சனோன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.நவீன தொழில்நுட்பமான 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படமானது வருகிற ஜூன் 16ஆம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒரே நேரத்தில் 5 மொழிகளில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.இதற்க்கு இடையே ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் திரையிடப்படும் அனைத்து திரை அரங்குகளிலும் ஒரு இருக்கையை ஆஞ்சநேயருக்கு ஒதுக்க வேண்டும் என படக்குழுவானது சமீபத்தில் தெரிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகி வருகிறது.அவர்கள் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் “ராமாயணம் எங்கெல்லாம் ஓதப்படுகிறதோ அங்கெல்லாம் ஆஞ்சநேயர் தோன்றுவதாக நம்பப்படுகிறது.எனவே அந்த நம்பிக்கையை மதிக்கும் விதமாக ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் திரையிடும் திரைஅரங்குளில் அனைத்து காட்சிகளிலும் ஆஞ்சநேயருக்கு ஒரு சிறப்பு இருக்கையை ஒதுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை சிலர் ஆதரித்தும், சிலர் எதிர்த்தும் சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.