சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்து நான் பேசியதற்காக வருந்தினேன் என்று நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்தார்.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படம் வரும் 14-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்தத் திரைப்படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதைத் தொடர்ந்து நடிகர் ஆர்.ஜே.பாலாஜி ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் தனது ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது ரசிகர் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஆர்ஜே பாலாஜி கூறும்போது, ‘நான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மிகப்பெரிய, பெரிய ரசிகன். சின்ன வயதில் நான் பள்ளியில் படிக்கும் போது என் தாத்தா ‘ரஜினி ஒரு நல்ல மனிதர்’ என்று சொன்னார். அது என் மனதில் அப்படியே ஆழமாக பதிந்து விட்டது.
சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரு அற்புதமான மனிதர். ஒரு சூப்பர்மேன். ‘தளபதி’ முதல் ‘தர்பார்’ வரை அவரை பற்றி நிறைய நினைவுகள் எனக்குள் உள்ளன. சில வருடங்களுக்கு முன்னர் அவரது அரசியல் வருகை வருவது குறித்து பேட்டி கொடுத்திருந்தேன். அந்த பேட்டியை நான் பின்னர் பார்க்கும்போது கஷ்டமாக இருந்தது.
நான் அப்படி பேசியிருக்க கூடாது என்று எனக்கு அடிக்கடி தோன்றும். அதற்காக நான் மிகவும் வருத்தப்பட்டேன். அவருக்கு அனைத்து சந்தோஷங்களும் அவர் நினைக்கும் எல்லா காரியமும் கைகூட வேண்டுமென நான் கடவுளை வேண்டிக் கொள்கிறேன்’ என்றார் ஆர்.ஜே. பாலாஜி.