அண்ணாத்த படத்தின் முதல் பாடலில் தனக்காக குரல் கொடுத்த எஸ்.பி. பாலசுப்ரமணியம், கடந்த 45 வருடங்களாக தனது குரலாகவே வாழ்ந்தவர் என்று உருக்கமான பதிவை பதிவு செய்திருக்கிறார் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இது குறித்து அவர் முதல் பாடல் வெளியீட்டின் போது வெளியிட்டுள்ள பதிவில், “45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்தே படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்,” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ‘அண்ணாத்த’ படத்தின் முதல் பாடல் நேற்று மாலை வெளியானது. இந்த பாடலை மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியிருக்கிறார்.
’சிறுத்தை’ சிவா மற்றும் ரஜினிகாந்த் முதல் முறையாக இணையும் திரைப்படம் ‘அண்ணாத்த’. நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, மீனா, குஷ்பு என ஏராளமான நட்சத்திர பட்டாளம் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். ‘சிறுத்தை’ சிவாவின் வழக்கமான பாணியில் குடும்ப படமாக, சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு பிடித்த வகையில் படத்தின் பாடல்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
இந்த முதல் பாடல் ஆரம்பிக்கும் போதே மறைந்த பாடகர் ‘இசை மேதை எஸ்.பி.பி. ஐயா அவர்களுக்கு எங்கள் இசை வணக்கங்கள்’ என்று மரியாதை வழங்கப்பட்ட பிறகே பாடல் தொடங்குகிறது.
‘ஜில்லா’, ‘என்றென்றும் புன்னகை’, ‘வேதாளம்’, ‘விஸ்வாசம்’ உள்ளிட்ட பல படங்களில் பாடல்கள் எழுதிய பாடலாசிரியர் விவேகா, ரஜினிக்கான அறிமுக பாடலை எழுதுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
காளை மாடு கண்களோடு, கோவிலில் வண்ணமயமான தோரணங்கள், சொந்த பந்தங்கள், ஊர் மக்கள் சூழ வெள்ளை வேட்டி சட்டையோடு பாடலில் ரஜினி அறிமுகம் என பக்கா கிராம பின்னணியில் கொண்டாட்டமாக பட்டைய கிளப்பும் திருவிழா பாடலாக இந்த ‘அண்ணாத்த’ முதல் பாடல் அமைந்திருக்கிறது.
ரஜினி – எஸ்.பி.பி. இருவரும் இணையும் இந்த வகை அறிமுக பாடல்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. துள்ளலான ஆட்டத்துடன் இந்தப்பாடல் துவங்குகிறது.
இயக்குநர் மகேந்திரன் இயக்கத்தில் உருவான, ‘முள்ளும் மலரும்’ படத்தில் ரஜினிக்கு காளி கதாபாத்திரம். இந்த படத்தில்தான் எஸ்.பி.பி. முதன் முறையாக ‘இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும்’ பாடலை ரஜினிக்காக பாடினார்.
இந்த நிலையில் அண்ணாத்த முதல் பாடல் வெளியானதையடுத்து, எஸ்பிபியின் கடைசி பாடல் பதிவு குறித்த தமது அனுபவத்தை பகிர்ந்து கொண்ட இமான், ரஜினி, எஸ்பிபி இருவருமே எழுபது வயதை கடந்தவர்கள். இருவரிடமே அந்த வயதுக்குரிய வயோதிகத்தை விட குதூகலமும் சக்தியும் இளைஞர்களுக்கு இணையாக இருந்ததை காண முடிந்தது என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
அண்ணாத்த முதல் பாடல் வெளியான 13 மணி நேரத்தில் 2.5 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.