கவிஞர், நடிகர், வசனகர்த்தா, என பன்முகதிறமையாளராக வலம் வந்த பிறைசூடனின் திடீர் மரணம் திரையுலகில் மிகப்பெரிய சோகத்தை உருவாக்கியுள்ளது. திருவாரூர் மாவட்டன், நன்னிலம் கிராமத்தில் 1956-ம் ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி பிறந்தவர் பிறைசூடன். 1985-ல் வெளியான ‘சிறை’ படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த ’ராசாத்தி ரோசாப் பூவே’ என்னும் பாடலை எழுதியதன் மூலம் தமிழ்த் திரைப்படத் துறையில் பாடலாசிரியராக அறிமுகம் ஆனார்.
இளையராஜா இசையில் ‘என்னைப் பெத்த ராசா’ படத்தில் ’சொந்தம் ஒன்றாய்’ என்ற பாடலை எழுதினார். ‘ராஜாதி ராஜா’ படத்தில் புகழ்பெற்ற காதல் பாடலான ‘மீனம்மா மீனம்மா’ பாடலை எழுதினார். ‘பணக்காரன்’ படத்துக்காக ‘நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்’ என்னும் திருமண வாழ்த்துப் பாடல் உட்பட தமிழ்த் திரைப்படங்களில் 1000க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார்.
ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் கொண்ட பிறைசூடன் சினிமா பாடல்களை மட்டுமல்லாது ஆன்மீக பாடல்களையும் எழுதியுள்ளார். டப்பிங் படங்களுக்கும் பாடல்கள், வசனம் எழுதியுள்ளார். ஏராளமான பட்டிமன்றம், கவியரங்கங்களுக்குத் தலைமை தாங்கியுள்ளார். 35 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழில் பல முக்கியமான பங்களிப்புகளை வழங்கிய பிறைசூடன் ஆஸ்கர் விருதுக்கு இந்தியப் படங்களைப் பரிந்துரைக்கும் குழுவில் சமீபத்தில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று தனது குடும்பத்தினருடன் வீட்டில் பேசிக்கொண்டிருந்த பிறைசூடன் சரிந்து விழுந்தது மரணமடைந்தார்.
இவரது அதிர்ச்சி மரணம் குறித்து தகவலறிந்த அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர் தங்களது இரங்களை தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், நல்ல பாட்டை மட்டுமே எழுதுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு எழுதிக் கொண்டிருக்கும் என் ஊர்க்காரர். உடன்பிறப்பு என தலைவர் கலைஞரால் புகழப்பட்டவர். திருவாரூர் மண்ணில் இருந்து புறப்பட்டு திரையிசையில் தனக்கென தனியிடம் பிடித்த கவிஞர் கலைமாமணி பிறைசூடன் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. பல தலைமுறை இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்து காலத்தால் அழியாத ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதிய அவரது மறைவு தமிழ் திரையியுலகுக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், ரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டு உள்ளார்.