கொரோனாவால் அடுத்தடுத்து திரைப்பிரபலங்கள் மரணிப்பது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. நடிகர்கள் சூர்யா, விஷால், அதர்வா, சரத்குமார், சுந்தர் சி என அடுத்தடுத்து பலரும் தொற்றால் பாதிக்கப்பட்டு, நல்ல முறையில் குணமடைந்தனர்.
ஆனால் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்படும் திரைப்பிரபலங்கள் பலரும் உயிரிழந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி.ஆனந்த், இயக்குநர் தாமிரா, ஆட்டோகிராஃப் புகழ் கோமகன், காமெடி நடிகர்கள் பாண்டு, ஜோக்கர் துளசி, கில்லி படத்தில் ஆதிவாசி கதாபாத்திரத்தில் நடித்த மாறன் என கொரோனா தொற்றால் பலரும் மரணித்துள்ளனர்.
தற்போது தமிழ் சினிமாவில் பிரபல துணை நடிகரான நிதீஷ் வீரா கொரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வல்லரசு படத்தில் அறிமுகமான நிதிஷ் வீராவிற்கு புதுப்பேட்டை, வெண்ணிலா கபடிக்குழு, காலா, அசுரன் ஆகிய படங்கள் திருப்புமுனையாக அமைந்தது. குறிப்பாக அசுரன் படத்தில் கொடூர வில்லன் ரேஞ்சுக்கு அசத்தியிருந்தார்.
இறுதியாக நிதீஷ் வீரா விஜய்சேதுபதியின் லாபம் படத்தில் நடித்து வந்த நிலையில், அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இந்நிலையில் சிகிச்சை பலன்றி இன்று நிதீஷ் வீரா காலமானார். அவருடைய மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.