பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலக் குறைவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்திய திரையுலகில் முன்னணி பின்னணி பாடகர் ஆன எஸ்.பி.பாலசுப்ரமணியம், கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
வெகு சில நாட்களில் குணமடைந்து வீடு திரும்புவேன் என எஸ் பி.பி வீடியோ வெளியிட்டு இருந்த நிலையில், திடீரென அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இதனால் அவர் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு செயற்கை சுவாச கருவிகள், உயிர் காக்கும் கருவிகளுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஒட்டுமொத்த திரையுலகமே அவர் குணமடைய பிரார்த்தனை செய்த நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் படிப்படியாக உடல்நிலை தேறி வந்த நிலையில், விரைவில் அவர் வீடு திரும்புவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக, எஸ்.பி.பிக்கு மூளையில் ரத்த கசிவு ஏற்படுவதாகவும், அவர் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில், கடந்த 51 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த எஸ்.பி.பி. இன்று பிற்பகல் 1.04 மணிக்கு காலமானதாக இயக்குனர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டார். அவரது மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
எஸ்.பி.பாலசுப்ரமணியம், கடந்த 1946-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் நெல்லூரில் பிறந்தார். பாடகர், இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் எஸ்.பி.பி. நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளதோடு, எஸ்.பி.பி தமிழ் சினிமாவையும் கடந்து ஒட்டுமொத்த திரை ரசிகர்கள் மத்தியிலும் நீங்க இடம் பெற்றுள்ளார்.