தனக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என நடிகை அபர்ணா பாலமுரளி தெரிவித்துள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டு வெளியான ‘சூரரைப்போற்று’ திரைப்படம் 5 தேசிய விருதுகளை வென்றது. இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது சூர்யாவிற்கும், சிறந்த நடிகைக்கான தேசிய விருது அபர்ணா பாலமுரளிக்கும் அறிவிக்கப்பட்டது. தேசிய விருது அறிவிக்கப்பட்டபோது அபர்ணா பொள்ளாச்சி பகுதியில் நடந்த ஷூட்டிங் பங்கேற்று இருந்தார்.
26 வயதான அபர்ணா கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர். ‘யாத்ரா தொடருன்னு’ என்ற மலையாள திரைப்படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர். இசையில் ஆர்வம் உள்ள இவர் முறையாக சங்கீதம் பயின்றவர். 2017ம் ஆண்டு வெளிவந்த 8 தோட்டாக்கள் படம் மூலம் தமிழில் அறிமுகமானார் (இப்படத்தில் இடம்பெற்ற ‘உனக்கென உருகினேன் என்னிடம் வா அன்பே’ என்ற பாடல் இன்றும் இளைஞர்களின் மனம் கவர்ந்த பாடலாக இருந்து வருகிறது). இந்த நிலையில் தேசிய விருது கிடைத்தது குறித்து தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
தேசிய விருது குறித்து அவர் கூறும்போது, “எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.இந்த விருதை இப்படத்தின் இயக்குநர் சுதாவிற்கு அர்ப்பணிக்கிறேன். அவர் தான் எனக்கு பின்புலமாக நின்று ஆதரவு அளித்தார். இந்த திரைப்படம் கொரோனா காலக்கட்டத்தில் வெளியானது. தியேட்டர்களில் முறைப்படி திரையிடாவிட்டாலும் நல்ல வரவேற்பை பெற்றது. என் உணர்ச்சிகளை (மகிழ்ச்சியை) விவரிக்க வார்த்தைகள் இல்லை” என்று தெரிவித்தார்.
-பா.ஈ.பரசுராமன்.