முன்னணி இயக்குனர்கள் இணைந்து ஒவ்வொருவரும் ஒரு குறும்படத்தை இயக்கி ஆந்தாலஜி திரைப்படங்களை இயக்கி வருகின்றனர்.கடந்த 2019 ஆம் ஆண்டு ஹலீதா ஷமீம் இயக்கத்தில் வெளியான ‘சில்லுக் கருப்பட்டி’ ஆந்தாலஜி படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழில் ஆந்தாலஜி படங்கள் வெளியாகி வருகின்றன .
ஏற்கனவே கவுதம் மேனன், வெற்றிமாறன், அரவிந்த் சாமி, சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பாவ கதைகள்’ என்கிற ஆந்தாலஜி படம் வெளியானது அதற்கு முன்பு புத்தம் புது காலை என்ற ஆந்தாலஜி படமும் வெளியானது.
இந்நிலையில், மீண்டும் ‘குட்டி ஸ்டோரி’ என்கிற தலைப்பில் ஒரு ஆந்தாலஜி திரைப்படம் உருவாகியுள்ளது. இதை கவுதம் மேனன், வெங்கட் பிரபு, விஜய் மற்றும் நலன் குமாரசாமி ஆகியோர் இயக்கியுள்ளனர். இதில், நலன்குமார சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள குறும்படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.
இரு நாட்களுக்கு முன்பு இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியிருந்த நிலையில், இன்று இப்படத்தின் ஸ்னேக் பீக் வெளியாகி இருக்கிறது. அதில், திருமணமான விஜய் சேதுபதி வேறு பெண்ணுடன் போனில் பேசுவதற்காக மாடியில் இருக்கும் தனது மாமனாரை கீழே அனுப்பிவிட்டு காதலியுடன் பேசத்தொடங்குவதோடு ஸ்னீக் பீக் முடிவடைகிறது. இந்த ஸ்னீக் பீக் வீடியோ தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இப்படத்தில் அமலாபால், விஜய் சேதுபதி, சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். நலன் குமாரசாமியின் ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்துபோகும்’ படங்களில் ஏற்கெனவே விஜய் சேதுபதி நடித்துள்ளார். மூன்றாவது முறையாக இக்கூட்டணி இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.