மலையாள ரீமேக் படம் ஒன்றில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கவுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா.
மலையாளத்தில் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் மஞ்சு வாரியர், ரோஷன் ஆண்ட்ரூஸ், அனுஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்து வெற்றிபெற்ற படம் ‘ப்ரதி பூவன்கோழி’. ஸ்ரீ கோகுலம் மூவிஸ் தயாரிப்பில் இந்தப் படம் 2019-ம் ஆண்டு டிசம்பர் 20-ல் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது. இந்தப் படம் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்படவுள்ளது.
இதன் தமிழ் ரீமேக் உரிமையை யார் கைப்பற்றியுள்ளார் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், பாலிவுட் ரீமேக் உரிமையை தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் கைப்பற்றியுள்ளார். முன்னணி நடிகையை வைத்து பாலிவுட்டில் ரீமேக் செய்வதற்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.
பேருந்துப் பயணத்தில் தன்னைத் தொட்ட ஒருவனை பெண் எப்படி பழிவாங்கினார் என்பதுதான் ‘ப்ரதி பூவன்கோழி’ படத்தின் கதையாகும். இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில்தான் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சி செய்துள்ளனர். இதற்கு அவரும் ஒப்புக்கொண்டுள்ளாராம்.