நடிகர் சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படத்தை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெகுவாக பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 39-வது திரைப்படம் ‘ஜெய் பீம்’. இப்படத்தை கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கி உள்ளார். நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் பிரகாஷ் ராஜ், கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சூர்யா தனது 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ள இந்தப் படம், நாளை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. முன்னதாக படத்தின் சிறப்புக்காட்சி பத்திரிக்கையாளர்களுக்கு திரையிடப்பட்டது. இதைப் பார்த்தவர்கள் ஜெய் பீம் படத்தை இணையத்தில் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் படத்தைப் பார்த்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெய்பீம் படத்தை வெகுவாக பாராட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “காவல் நிலையம் ஒன்றில் நடந்த இதே போன்ற தாக்குதல் தான், சென்னை மத்திய சிறையில் 1976-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் நாள் இரவு எனக்கும் நடந்தது. என் மீது விழுந்த பல அடிகளை தாங்கியவர் மரியாதைக்குரிய சிட்டிபாபு அவர்கள். அதனால் அவரது உயிரே பறிபோனது. அன்று நடந்த சித்திரவதைகளை ’சிறை டைரி’யாக சிட்டிபாபு அவர்கள் எழுதியுள்ளார்கள். இந்த நினைவுகள் அனைத்தும் நேற்று ஜெய்பீம் பார்த்து விட்டு வெளியில் வந்தபோது மனக்கண் முன் நிழலாடியது.
இப்படி பல்வேறு தாக்கங்களை என்னுள் ஏற்படுத்த காரணமான ’ஜெய்பீம்’ படக் குழுவினருக்கு எனது பாராட்டுகள்! நண்பர் சூர்யாவுக்கு எனது வாழ்த்தும் நன்றியும்!” எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கைக்கு நடிகர் சூர்யா தனது நன்றியை தெரிவித்து பதிலிற்கு ட்வீட் செய்துள்ளார்.




