இரண்டாண்டுகளுக்கு பிறகு நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடைசூழ மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளதை அடுத்து மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக பிரசித்திப் பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா பக்தர்களுக்கு அனுமதியளிக்காமல் கோயில் வளாகத்தில் நடத்தி முடிக்கப்பட்டு வந்தது. ஆனால் நடப்பாண்டில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால், சித்திரைத் திருவிழாவை காண பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இன்று மீனாட்சி அம்மன் கோயிலில் மிதுன லக்னத்தில் தங்கக் கொடி மரத்தில் உற்சவக் கொடியேற்றப்பட்டது. முன்னதாக சிவாச்சாரியார்கள் மறை வாழ்த்துக்களை பாடினர். மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் எழுந்தருள சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பட்டன. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
வரும் 12 ம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம், 13 ம் தேதி திக் விஜயம், 14 ம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், 15 ம் தேதி திருத்தேரோட்டம் மற்றும் கள்ளழகர் எதிர்சேவை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. ஏப்ரல் 16 ம் தேதி கள்ளழகர் வைகயாற்றில் எழுந்தருளும் நிகழ்வும் நடைபெறவுள்ளது. இது சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாகும். காலை 5.50 முதல் 6.20 மணிக்குள் திருவிழா நடைபெற்று முடியவுள்ளது.
சித்திரை திருவிழா நடைபெறும் 12 நாட்களிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். கோவிலை சுற்றிலும் உள்ள சித்திரை வீதிகளில் பந்தல் அமைக்கும் பணிகள், தற்காலிக கழிவறைகள் குடிநீர் வசதிகள் என பல்வேறு முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.