திரெளபதி படத்தை தொடர்ந்து இயக்குநர் மோகன் ஜி, ரிச்சர்ட் ரிஷி நடித்துள்ள திரைப்படம் ருத்ரதாண்டவம். இந்த படத்தின் திரைவிமர்சனம் இதோ….
படத்தின் கதை:
தமிழ்நாடு முழுவதும் தற்போதைய மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது, இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி சீரழிவது. போதை எதிர்ப்பு பிரசாரத்தை ஒருவரிக் கதையாக எடுத்துக்கொண்டு அதனை, மதவாத, சாதியவாத அரசியல் பின்னணியோடு பயணிக்கிறது திரைக்கதை.
இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமானால் மெட்ராஸ், வடசென்னை, அசுரன், பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களுக்கான மாற்று சினிமாவாக ருத்ர தாண்டவம் படத்தை முன்னிறுத்த முயல்கிறார் இயக்குநர். மேலே குறிப்பிட்ட படங்களின் இயக்குநர்கள், தங்களது நேரடி அனுபவங்களையும், படைப்பிலக்கியங்கள் வழியாக படித்துணர்ந்தவைகளையும் யதார்த்தமான திரைமொழியில் கொண்டுவந்தனர். ஆனால், ருத்ர தாண்டவம் அப்படி இல்லாமல், முழுக்க முழுக்க பிரசார தொனியில் அறமற்ற அரசியல் பேசுகிறது.
கதாபாத்திரங்கள்:
போலீஸ் அதிகாரியாக ரிச்சர்ட் நடித்துள்ளார். வேலை போன பிறகு சோகமாக இருந்தால் ஓகே. அதற்கும் முன்பும் சோகமயமாகவே இருக்கிறார். காரணம் என்ன ரிச்சர்ட்?
ரிச்சர்ட்டுக்கும் நாயகி தர்ஷா குப்தாவுக்கும் பெரிதாக கெமிஸ்ட்ரி இல்லை. ஒருவேளை மிடுக்கான போலீஸ் என்பதால் அதை குறைத்துவிட்டாரோ?. அழகான பாசமான மனைவியாக வந்து செல்கிறார் தர்ஷா குப்தா.
உயர் அதிகாரியாக ஜேஎஸ்கே கோபி. இவரும் யதார்த்த போலீசாக நடித்துள்ளார். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தன் துறை அதிகாரிக்கு எப்படி உதவ வேண்டும் என்பதை சொல்லும் விதம் அருமை. நிறைய படங்களில் இனி இவருக்கு வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கலாம்.
வக்கீல் இந்திரசேனாவாக ராதாரவி. கேரக்டரில் நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார். நாம் வாழ்க்கையில் சந்திக்கும் வக்கீல் போல சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். மற்றொரு வக்கீலாக மாரிமுத்து. இவர் நியாயம் எது என்பதை பாராமல் காசுக்கு வேலை செய்யும் வக்கீலை காட்டியிருக்கிறார்.
போலீஸ் ரைட்டராக தம்பி ராமையா. நீண்ட நாளைக்கு பிறகு இவருக்கு பொறுப்பான வேடம். மனிதர் குறை வைக்காமல் நடிப்பை வழங்கியுள்ளார்.
வில்லனாக கௌதம் மேனன். ஓவராக கத்தி மிரட்டி வில்லத்தனம் செய்யாமல் தேவைக்கு ஏற்ப கெஞ்சியும் மிரட்டியும் சாதிக்கும் வில்லனிசம் செம.
போதை பொருள் விற்கும் இளைஞனாக பெரிய காக்கா முட்டை நடித்துள்ளார். இவரும் இவரது நண்பரும் தங்கள் கேரக்டரில் கச்சிதம். தீபா அக்கா, ஒய்ஜி
மகேந்திரன், மனோபாலா, ராம்ஸ் ஆகிய அனைவரும் தங்கள் கேரக்டர்களில் சிறப்பு. அம்பானி சங்கர் உள்ளிட்ட சில கலைஞர்களுக்கு வேலையே இல்லை.
திரை விமர்சனம்:
போதை பொருட்கள் இறக்குமதியாகும் இடமாக வடசென்னையை காட்சிப்படுத்துவதில் தொடங்கி, ஈழ அரசியலை முன்வைத்து தமிழக அரசியல்வாதிகள் பிழைப்பு நடத்துவதாக காட்டுவதும், திராவிட சித்தாந்தத்தை மிகமோசமானதாக சித்தரிப்பதும், பிசிஆர் எனப்படும் சாதிய வன்கொடுமை சட்டத்தை, தலித் அரசியலுக்கான முதலீடாக பயன்படுத்தவதைப் போன்றும், கிறிஸ்துவ மதமாற்றத்தை விமர்சிப்பதுமாக எல்லாவற்றையும் சேர்த்து சரியான பதத்துடன் வேகாத கூட்டாஞ்சோறு உருவாகியிருக்கிறது ருத்ர தாண்டவம்.
வில்லனாக வரும் கெளதம் வாசுதேவ் பாத்திரத்திற்கு வாதாபி ராஜன் என்ற பெயரை வைத்து, அவர் தோன்றும் காட்சிகளின் பின்னால் புத்தர் சிலையும், அவரை சுற்றி எப்போதும் கறுஞ்சட்டையுடன் அடியாட்களை நிறுத்தி வைத்துள்ளதும் அபத்தமான குறியீடுகள்.? இதன்மூலம் இயக்குநர் சொல்ல நினைப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. இன்னொருபக்கம் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக, நாயகன் ருத்ரனை பொருளாதாரத்தில் பின்தங்கிய தர்மபுரிகாரராக காட்டும் இயக்குநரின் நுட்பம் பலே பலே.
சாதியையும் மதத்தையும் வைத்து மக்களை பிரிக்க வேண்டாம் என நாயகன் குமுறுவதை விடவும், நீதிமன்ற காட்சியில் “தான் பட்டியினத்தவன்தான்” என ராதாரவியை உரக்க பேசவைத்து, தன்னை தலித் அனுதாபியாக காட்ட இயக்குநர் ரொம்பவே மெனக்கெட்டுள்ளார். ( ஒருவேளைஅது உண்மையாக இருந்தால்!!! மகிழ்ச்சி தான்) பிரம்மாண்ட இயக்குநராக சொல்லப்படும் சங்கரின் படங்கள் பேசும் அரசியலின் கறுப்பு வெள்ளை ஜெராக்ஸாக ருத்ர தாண்டவம் படத்தைக் கூறலாம்.
விவசாயிகளை வைத்து கோலிவுட் இயக்குநர்கள் பிழைப்பு நடத்த முயல்வதைப் போல, வடசென்னையும் அவர்களின் கைகளில் சிக்கி சின்னாபின்னமாகிறது. வடசென்னையையும் அங்குள்ள மக்களையும் மேலும் மேலும் காயப்படுத்த வேண்டாமே. ரிச்சர்ட் இன்னும் ரோபோடிக் உணர்வுகளோடு தான் திரையில் வந்து செல்கிறார். தம்பி ராமையா போலீஸ் யுனிஃபார்மில் இருக்கும் போதும் அந்த சிலுவை மட்டும் ஏன் அப்படி பளிச்சென்று தெரிய வேண்டுமோ!. மற்றபடி சொல்ல ருத்ர தாண்டவத்தில் எதுவும் இல்லை.