மலையாள நடிகை நஸ்ரியாவுக்கு நடிகை அஹானா கிருஷ்ணா ஆதரவாகப் பேசியுள்ளார்.
மலையாள நடிகையான நஸ்ரியா தமிழில் ராஜா ராணி, திருமணம் என்னும் நிக்காஹ் உள்ளிட்ட படங்களில் நடித்தார். பின்னர் மலையாள நடிகர் பகத் பாசிலைத் திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் பகத் பாசில் மற்றும் நஸ்ரியா ஜோடி, அண்மையில் போர்ஷ் 911 கேரிரா எஸ் என்ற விலை உயர்ந்த காரை வாங்கியுள்ளனர். மணிக்கு 308 கிலோமீட்டர் வேகம் வரை செல்கிறது இந்தக் கார். இந்தக் காரின் ஷோரூம் விலை 1.90 கோடி ரூபாய். வரிகள் உள்பட காரின் விலையைக் கேட்டாலே மயக்கம் வருகிறது. கார் வாங்கியதற்காக பாசில்-நஸ்ரியா ஜோடிக்கு பலர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
ஆனால் சில ரசிகர்கள் அவர்களை கிண்டலும் செய்தனர். இவ்வளவு விலை கூடிய கார் வாங்கியதற்குப் பதிலாக அந்தப் பணத்தில் ஏழைகள் பலருக்கு உதவியிருக்கலாம் என்று சமூக வலைத்தலங்களில் கருத்துகள் போட்டனர்.
இந்நிலையில் நஸ்ரியாவுக்கு ஆதரவாக கேரளாவில் பிரபல இளம் நடிகை அஹானா கிருஷ்ணா பேசியுள்ளார். அவர் கூறும்போது, “தங்கள் பொறாமையைத் கட்டுப்படுத்த முடியாதவர்கள், இந்த மாதிரி விஷத்தைக் கக்குகின்றனர். இதுபோன்ற கருத்துகளை இடுகையிடும் நபர்களுக்கு, உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன், அது பொறாமை தவிர வேறொன்றும் இல்லை. மற்றவர்கள் முன்னேற்றத்தைப் பார்த்து மகிழ்ச்சியடைய முயற்சி செய்யுங்கள். தேவையற்ற சூழ்நிலைகளில் உங்கள் வாயை மூடிக்கொள்ள இது உங்களுக்கு உதவும்”என்றார்.




