தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக, நடிகர் விஜய் மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் கண்டிப்பாக அரசியல் கட்சி தொடங்குவார் என பல காலங்களாக கூறப்பட்டு வந்தாலும், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை அதை நம்ப முடியாது எனவே பல தரப்பினரும் கூறி வந்தனர். நடிகர், ரஜினியின் முடிவை பொருத்தே விஜய் தனது அரசியல் பயணம் குறித்த முடிவை அறிவிப்பார் என கூறப்பட்டது.
அடுத்த ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த முறை விஜய் தரப்பில் இருந்து ஏதேனும் அறிவிப்பு வெளியாகலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. சமீபத்தில் கூட, தனது ரசிகர்மன்ற நிர்வாகிகளை விஜய் அழைத்து ஆலோசனை நடத்தி இருந்தார்.
இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக மாறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்சியின் பெயரை, தலைமை தேர்தல் ஆணையத்தில் விஜய் தரப்பு பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போதைய தகவலின் படி, அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரை பதிவு செய்துள்ளதாகவும், அந்த விண்ணப்பத்தில் தலைவராக பத்மநாபன் என்பவரையும், பொதுச்செயலாளராக எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பொருளாளர் ஆக அவரது தாயார் ஷோபாவையும் குறிப்பிடப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இதுதொடர்பான, அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியானது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கட்சியின் பெயரைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ததாக வெளியான தகவல் தவறானது என விஜய்யின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அகமது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்