தன்னைப் பற்றிய அவதூறான தகவல்களைப் பரப்பியதாக சில யூடியூப் சேனல்கள் மீது நடிகை சமந்தா மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். சமீபத்தில் தனது காதல் கணவரும், நடிகருமான நாக சைதன்யாவை விவாகரத்து செய்யவிருப்பதாக சமந்தா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
நாக சைதன்யாவும் அதேபோன்று அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து சமந்தாவின் விவாகரத்துக்கான காரணங்கள் குறித்து சமூக ஊடகங்களிலும், சில யூடியூப் தளங்களிலும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டன. இந்த விவாகரத்துக்கு காரணம் சமந்தாதான் என்று அவரைப் பலரும் குற்றம்சாட்டி வந்தனர். இதனிடையே, தனது தனிப்பட்ட விவகாரங்களில் யாரும் தலையிட வேண்டாம் என்றும், எந்த விதமான எதிர்மறை விஷயங்களும் தன்னை பாதிக்காது என்றும் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
மேலும் இந்த விவகாரத்தில் நாக சைதன்யாவோ, அவரது குடும்பத்தில் மற்றவர்களோ சமந்தாவுக்கு ஆதரவு தரவில்லை. இந்த நிலையில் தன்னைப் பற்றி அவதூறாகத் தகவல்கள் பரப்பிய சுமன் டிவி, தெலுங்கு பாப்புலர் டிவி உள்ளிட்ட சில யூடியூப் சேனல்கள் மீது சமந்தா மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் வெங்கட் ராவ் என்கிற வழக்கறிஞர் தனது திருமண வாழ்க்கை குறித்தும், தனக்கு மற்ற ஆண்களுடன் தொடர்பு இருந்ததாகவும் தவறாகப் பேசியதால், அவர் மீதும் சமந்தா வழக்கு தொடர்ந்துள்ளார். விவாகரத்தைச் சுற்றி எழுந்திருக்கும் தேவையில்லாத சர்ச்சையால் தான் மனதளவில் சோர்வடைந்திருந்தாலும், தனது உரிமைக்காகக் குரல் கொடுக்கும் சமந்தாவின் இந்த நடவடிக்கை அவரை பெண் உரிமைக்காகப் போராடும் போராளியாக உருவகப்படுத்தும் முயற்சியில் அவரது ரசிகர்கள் ஈடுபட்டுள்ளனர்
நாக சைதன்யா – சமந்தா மண முறிவுக்கு சமந்தா மட்டுமே காரணம் என்கிற தொனியில் ஒருதலைப் பட்சமாக தெலுங்கு ஊடகங்கள் தொடர்ச்சியாக செய்திகளை வெளியிட்டு வந்தன. இதற்கு சட்டரீதியாக முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியின் தொடக்கமாக நீதிமன்றக் கதவுகளை சமந்தா தட்டியிருக்கிறார் என்கின்றனர் சமந்தா ஆதரவாளர்கள்.