கர்ணன் திரைப்படத்தின் தலைப்பை பயன்படுத்துவதற்கு சிவாஜி நலப்பேரவை அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்து வரும் கர்ணன் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. படத்தின் தலைப்பை வெளியிட்ட தயாரிப்பாளர் தாணு, “கர்ணன், அன்பு, இரக்கம், கருணை உள்ளவர் மட்டுமல்லர்… வெற்றியையும் தருபவர்” என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
ஏற்கனவே 1964ஆம் ஆண்டு சிவாஜி நடிப்பில் வெளியான கர்ணன் படத்தை பி.ஆர்.பந்துலு இயக்கியிருந்தார். அதே தலைப்பு தனுஷ் படத்துக்கும் வைக்கப்பட்டுள்ளதால் அதனை மாற்ற வேண்டும் என சிவாஜி ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
இதுதொடர்பாக சிவாஜி சமூக நலப்பேரவை இன்று தனுஷுக்கு எழுதியுள்ள கடிதத்தில், நடிகர் திலகம் சிவாஜியின் லட்சோப லட்ச ரசிகர்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் கர்ணன் என்றாலே நினைவில் நிற்பது நடிகர் திலகத்தின் கர்ணன் திரைப்படம்தான் என சுட்டிக்காட்டியுள்ளது.
ஒரு திரைப்படத்தின் பெயரை மீண்டும் பயன்படுத்த சட்டப்படி இடமிருந்தாலும், நியாயப்படி, மனசாட்சிப்படி சில திரைப்படங்களின் பெயர்கள் மீண்டும் பயன்படுத்தாமல் தவிர்க்கப்படவேண்டும். ஏனெனில், அந்தப் பெயர்களே திரைப்படத்தின் கதைக்களத்தைத் தாங்கி கால காலத்திற்கும் நிலைத்து நிற்கக்கூடியதாக இருக்கும் என்றும் கூறியுள்ளது.
அந்தவகையில்தான் தாங்கள் நடித்து ஏற்கெனவே திருவிளையாடல் என்ற தலைப்பில் திரைப்படம் வெளிவரவிருந்தபோது எதிர்ப்பு தெரிவித்தோம். அதன்பிறகு ‘திருவிளையாடல் ஆரம்பம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு திரைப்படம் வெளிவந்தது.
அதே சமயத்தில். தாங்கள் நடித்து வெளிவந்த உத்தமபுத்திரன் திரைப்படத்திற்கு நாங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். அதுபோலவே. ஆண்டவன் கட்டளை, ராஜா, பச்சை விளக்கு என்று நடிகர் திலகம் நடித்த படங்களின் பெயரிலேயே மீண்டும் பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன என்ற சிவாஜி பேரவையின் நிறுவனர் சந்திரசேகர்,
அதுபோன்ற சமூகப் படங்களின் பெயர்களை மீண்டும் வைப்பதற்கு யாரும் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கப் போவதில்லை. ஆனால், சரஸ்வதி சபதம், திருவிளையாடல், கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போன்ற குறிப்பிட்ட தலைப்புகள் மீண்டும் பயன்படுத்தப்படக் கூடாது. ஏனெனில் அந்தத் திரைப்படத் தலைப்பின் தனித்துவம் அப்படி எனவும் கூறினார்.
read more; ரஜினி சொத்தில் பாதியை மக்களுக்கு தரலாமே? சீமான்
இறுதியாக, “கர்ணன் என்றாலே கொடுப்பவன், கொடைவள்ளல்தான். ஆனால், தாங்கள் நடிக்கும் திரைப்படத்தின் கதையோ உரிமைக்காகப் போராடும் ஒருவருடைய கதை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மகாபாரதக் கதையையே மீண்டும் உருவாக்குகிறோம். அதில் ‘கர்ணன்’ கதாபாத்திரம் வருவதால் இந்தப் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது என்றால் பரவாயில்லை. ஒரு சமூகத் திரைப்படத்திற்கு ‘கர்ணன்’ என்று பெயரிட்டு அதில் தாங்கள் நடிப்பது ஏற்கத்தக்கதல்ல.
இது லட்சோபலட்ச நடிகர் திலகம் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, மகாபாரதத்தை நேசிக்கும் கோடிக்கணக்கானவர்களின் மனதையும் புண்படுத்தக்கூடியதாக அமையும். எனவே. ‘கர்ணன்’ என்ற தலைப்பினை மாற்றி அமைத்திடவேண்டும்” என தனுஷுக்கு சிவாஜி நலப்பேரவை கோரிக்கை வைத்துள்ளது.