விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் தளபதி 65 படம் எந்தப் படத்தின் 2 ஆம் பாகமும் இல்லை என்றும், புதிய கதை கொண்ட படமாக உருவாகும் என்றும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
பிகில் படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியாக இருந்தது. ஆனால், கொரோனா லாக்டவுன் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. மாஸ்டர் படத்தின் விஜய் உடன் இணைந்து விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சஞ்சீவ், பிரேம், நாசர், பிரிகிதா, கௌரி ஜி கிஷான் என்று ஏராளமானோர் நடித்துள்ளார்.
மாஸ்டர் படத்தின் ரிலீஸுக்காக கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் தளபதி 65 படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்தப் படத்தை இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்க இருப்பதாக அண்மையில் அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், டோக்கியோ தமிழ் சங்கத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் நடந்த லைவ் நிகழ்ச்சியில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கலந்து கொண்டு தளபதி விஜய் குறித்தும், அவருடன் பயணம் செய்த அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு திரைக்கு வந்த துப்பாக்கி படத்தின் மூலம் விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் கூட்டணி சேர்ந்தனர். இந்த கூட்டணியில் வந்த துப்பாக்கி படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, கத்தி படம் உருவானது.
இந்தப் படம் கலவையான விமர்சனமே பெற்றது. எனினும், 3ஆவதாக வந்த சர்கார் படத்திற்கு பட்டி தொட்டியெங்கும் வரவேற்பு கிடைத்தது.
இந்த நிலையில், தற்போது விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் தளபதி 65 படம் உருவாக இருக்கிறது. இயக்குநர் ஓகே. ஆனால், தயாரிப்பாளர் யார் என்பது குறித்து அவ்வப்போது சில தகவல் வெளியானது. அதில் ஒன்று தான் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தளபதி 65 படத்தை தயாரிக்க இருப்பதாக கூறப்பட்டது.
இது குறித்து பேசிய ஏ.ஆர். முருகதாஸ் பெரிய நிறுவனம் ஒன்று இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை விரைவில் வெளியிடும். இப்போதைக்கு என்னால் எதுவும் சொல்ல முடியாது என்று சிரித்துக் கொண்டே கூறினார்.
அப்போதே தளபதி ரசிகர்களுக்கு புரிந்துவிட்டது. தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க இருக்கிறது. இதுவே ஒரு சந்தோஷமான தகவல் தான் என்றாலும், இயக்குநர் மற்றொரு தகவலையும் பகிர்ந்து கொண்டார். புதிய கதையுடன் தான் தளபதி 65 படம் உருவாக இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
ஆம், தளபதி 65 படம் துப்பாக்கி படத்தின் 2ஆம் பாகம் என்று அண்மையில் தகவல் வெளியானது. ஆனால், தற்போது அது இல்லை என்று தெளிவாகியுள்ளது. மேலும், எந்தப் படத்தின் தழுவலும் இல்லை என்றார்.
தளபதி 65 படம் குறித்து அப்டேட் வெளியானதைத் தொடர்ந்து டுவிட்டரில் #Thalapathy65 என்ற ஹேஷ்டேக் டிரெண்டானது என்பது குறிப்பிடத்தக்கது.