ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் பீம் டீசர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், சுதந்திரப் போராட்ட வீரர்கள் அல்லூரி சீதாராம ராஜூ, கொமாரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்படுகிறது. சீதாராம ராஜூவாக ராம் சரணும், கொமாரம் பீமாக ஜூனியர் என்.டி.ஆரும் நடிக்கின்றனர்.
ஏற்கெனவே, ராமராஜூவாக ராம் சரண் தோன்றும் ஃப்ர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய படக்குழு, தற்போது கொமாரம் பீம் ஆக வரும் ஜூனியர் என்.டி.ஆரின் டீசரை வெளியிட்டுள்ளனர். இன்று காலை வெளியிடப்பட்ட ஜூனியர் என்.டி.ஆரின் ‘பீம்’ லுக் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருள் ஆகியுள்ளது. இதுவரை அவரை இத்தகைய தோற்றத்தில் பார்த்திருக்கவில்லை என ரசிகர்கள் சிலாகித்துக் கொண்டாடுகின்றனர்.
கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பெரும் இடைவேளைக்குப் பின்னர், அத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடனும் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2021ம் ஆண்டு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் வெளியிடப்படுகிறது.