தனது வித்தியாசமான திரைக்கதைகளால் தமிழ் சினிமாவையும், சினிமா ரசிகர்களையும் பிரம்மிக்க வைத்துக் கொண்டிருக்கும் வெற்றி இயக்குனர் வெற்றி மாறனின் 45 வது பிறந்தநாள் இன்று.
தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத இயக்குனர்களில் ஒருவரான பாலு மகேந்திராவின் பட்டறையில் பட்டை தீட்டப்பட்டவர் இயக்குனர் வெற்றிமாறன், பொல்லாதவன் என்னும் வித்தியாசமான திரைக்களத்துடன் கோலிவுட்டில் தனது வெற்றிப் பாதத்தை பதித்தார். அதன்பிறகு அவர் படைத்த அத்தனையுமே சரித்திரம் தான்.
வித்தியாசமான திரைக்களங்கள் :
வித்தியாசமான திரைக்கதையை ஒவ்வொரு நொடியும் சுவாரஸ்யமாக கொண்டு செல்வதில் இவர் வல்லவர். ஒரு பைக்கை வைத்து இரண்டரை மணி நேரம் யாரால் கதையை நகர்த்த முடியும்? இவரால் முடியும். முதன் முதலாக வில்லனுக்கு பிளாஷ்பேக் வைத்ததும் நம் வெற்றி இயக்குனராக தான் இருப்பார். பக்கத்து வீட்டு பையன் போல் உருவத்தை வைத்துக் கொண்டு எதார்த்தமாக வலம் வந்து கொண்டிருந்த நம் பெருமை மிகு நாயகன் தனுஷ் சிக்ஸ் பாக்குடன் சண்டையிட்டதும் இந்த வெறிக்களத்தில் தான்.
முதல் படமே முகவரியாய் அமைந்துவிட தனுஷுன் கைகளில் இம்முறை வெற்றிமாறன் சேவலைக் கொடுத்து ஆடுகளத்தில் இறக்கிவிட்டார். தனுஷ் ஆடுகளமே அதிரும்படி நடிப்பில் பட்டைக் கிளப்பினார். சேவல் சண்டை வெறும் பொழுதுப்போக்கு மட்டுமல்ல பலரின் கௌரவ பிரச்சனையும் என சொல்லி இருப்பார் வெற்றிமாறன். தனி மனித வன்மம் பலரின் வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது என்பதை தெளிவாக எடுத்து உரைத்திருப்பார். தாடி மீசை மட்டுமே முழு முகத்தையும் சூழ்ந்திருக்க, அதிலும் பாசம், கோவம், வன்மம் என அத்தனை நவரசமும் கொண்டு வந்த பேட்டைக்காரன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத கேரக்டர். வெள்ளாவியில் வெளுக்கப்பட்ட டாப்சீ தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஐரினாக அறிமுகமானதும் ஆடுகளத்தில் தான். இப்படம் பல தேசிய விருதுகளை தமிழ் சினிமாவிடம் ஒப்படைத்தது.
அதன்பிறகு உதயம் NH4, நான் ராஜாவாக போகிறேன், பொறியாளன், காக்கா முட்டை போன்ற திரைப்படங்களை தயாரித்தார். இதில் காக்கா முட்டை தேசிய விருது, பிலிம் ஃபேர் விருது, எடிசன் விருது என வாரிக் குவித்தது.
அட்டக்கத்தியாக ஆட்டம் போட்ட தினேஷை விசாரணை கைதியாக கொண்டு வந்தார் வெற்றிமாறன். குத்து பாட்டு, இரட்டை அர்த்த வசனம் , காமெடி, காதல் கூடல் எதுவும் இல்லாமல் வந்து வெற்றி பெற்றது நம் வெற்றிமாறனின் விசாரணை. நாம் அனைவரும் காவல் துறையினரின் விசாரணையை பற்றி கேள்விதான் பட்டுள்ளோம், அதற்கு பின்னால் உள்ள அரசியல் மற்றும் அதிகாரத்தை தோலுரித்து காட்டினார் நம் இயக்குனர். விசாரணைக்கு கிடைத்த பதிலாக வழக்கம் போல் தேசிய விருதுடன் விகடன் விருதையும் கோலிவுட்டின் கைகளில் கொடுத்து விட்டு தனது அடுத்த படைப்புக்கான வேலையை நோக்கி நகர்ந்தார் மாறன்.
கொடி, லென்ஸ், அண்ணனுக்கு ஜே, படங்களின் தயாரிப்பாளர் ஆனார் வெற்றி மாறன்.
தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி: வெற்றி கூட்டணி
நம் நாட்டில் அரசியல் கட்சிகளின் கூட்டணி கூட தோற்று போகலாம் தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி நின்று பேசும் கூட்டணி. அடுத்தடுத்து வெடிக்கும் சரவெடிகளாக வந்தது வட சென்னை மற்றும் அசுரன். உங்களின் ஒரு படத்தை கொண்டாடி தீர்க்கும் முன்பே அடுத்தடிக்கும் அலையாக இன்னொரு படத்தை கொண்டு வந்தால் ரசிகர்கள் நாங்கள் திக்குமுக்காடி விடமாட்டோமா!!!!
தமிழ்நாட்டின் முதலமைச்சராக எம் ஜி ஆர், இந்திய நாட்டின் பிரதமராக ராஜிவ் காந்தி, இருவரும் இறக்கும் தருவாயில் இருந்த காலகட்டத்தின் கதைக்களம் வட சென்னை. கேரம் விளையாடும் சின்ன பையனாக வந்து தாதாவாக மாறும் தனுஷ், வடசென்னை பெண்ணாக வாழ்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர் மற்றும் சமுத்திரக்கனியின் மனைவியாக வரும் ஆண்ட்ரியா சில இடங்களில் ‘பொன்னியின் செல்வன்’ நந்தினியின் கதாபாத்திரத்தை மனதில் கொண்டு வருகிறார். கிஷோர் க்கும் சமுத்திரக்கனிக்கும் அமைதியாக ஒரு நடிப்பு போட்டியே நடந்தேறியது. இயக்குனர் அமீர் அழுத்தமான ஒரு கதாபாத்திரத்தை அசால்டாக கையில் எடுத்து வாழ்ந்து காட்டிவிட்டார்.
தமிழ் சினிமாவை ஐப்பசி மழையாக அடிச்சு வெளுத்தியது நம் அசுர இயக்குனரின் அசுரன் திரைப்படம். இப்படி ஒரு கதையை இனி யாராலும் சொல்ல முடியாது. தனுஷ் ஒரு ஒரு படத்திலும் நடிப்புக்கான ஒரு அகராதியை எழுதி விடுவார் என அனைவரும் அறிந்ததே, ஆனால் இந்த சிவசாமி நம்மை கொஞ்சம் அதிகமாகவே அசர வைத்து விட்டார். நடிப்பில் அத்தனை முதிர்ச்சி ‘என் மகனின் முகம் மறந்து விடுமோ’ என முருகனின் தந்தையாக சிவசாமி புலம்பும் போது நம் மனம் சற்றே கலங்கி தான் போனது. மஞ்சு வாரியர் சிவசாமியின் மனைவியின் நெஞ்சுரத்தை தனது அழகான நடிப்பால் நியாயம் செய்து விட்டார். சிவசாமியின் மகனாக வாழ்ந்த டி. ஜே மற்றும் கென் கருணாஸ் தமிழ் சினிமாவின் நல்ல வரவுகள். இந்த படம் வெற்றிமாறன் இயக்கிய படங்களிலேயே அதிக வசூலை அள்ளியது.
பெயரிலேயே வெற்றியைக் கொண்டுள்ள வெற்றிமாறன் இதுவரை தனது பயணத்தில் வைத்து வரும் காலடிகள் அனைத்துமே வெற்றிச் சின்னமாகவே பதித்து வருகிறார். தமிழ் சினிமாவுக்கு பல தேசிய விருதுகளை பெற்று தந்த இயக்குனர் வெற்றிமாறனுக்கு செய்திஅலையின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.