மலையாளத் திரையுலகத்தின் மூத்த நடிகர்களில் ஒருவரான சித்திக், தமிழ் சினிமாவில் ‘இளைய தளபதி’ என்று கொண்டாடப்படும் நடிகர் விஜய்யை “சிறந்த நடிகர் அல்ல” என்று குறிப்பிட்டிருப்பது பெருத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள ஊடகம் ஒன்றுக்கு சித்திக் அளித்த பேட்டியில் தான் இப்படி சொல்லியிருக்கிறார்.
அந்தப் பேட்டியில் சித்திக் சினிமாத்துறை பற்றி பேசும்போது, “மலையாளத் திரையுலகம் நிறையவே அதிர்ஷ்டம் செய்துள்ளது. அதனால்தான் மம்மூட்டி, மோகன்லால் என்ற இரண்டு மறுக்க முடியாத சூப்பர் ஸ்டார் நடிகர்களைக் கொண்டுள்ளது.
மற்றைய திரையுலகத்தில்கூட இப்படியில்லை.
தமிழ்த் திரைப்படத் துறையில் வித்தியாசமான நிலைமைதான் உள்ளது. தமிழகத்து மக்கள் நடிகர் விஜய்யை ‘சூப்பர் ஸ்டார்’ என்று போற்றுகிறார்கள். ஆனால், அவர் சிறந்த நடிகர் அல்ல. அவருடைய ‘சூப்பர் ஸ்டார்’ பட்டம் மட்டுமே அவரை உயரத்தில் வைத்திருக்கிறது.
அதேநேரம் தமிழ்ச் சினிமாவில் கமல்ஹாசனை சிறந்த நடிகர் மற்றும், சூப்பர் ஸ்டார் நடிகர் என்றும் சொல்லலாம்…” என்று பேசியிருக்கிறார் நடிகர் சித்திக்.
நடிகர் சித்திக்கின் இந்த கருத்து குறித்து மற்றொரு மலையாள நடிகரான ஹரீஸ் பெராடி பேசும்போது, “விஜய் சிறந்த நடிகர் மட்டுமல்ல; தற்போதைய தலைமுறையினருக்கு சூப்பர் ஸ்டார் நடிகரும் அவர்தான். அவர் ஒரு சிறந்த மனிதரும்கூட” என்று சொல்லியிருக்கிறார்.




