அந்த தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு முன்னர் இழுத்து போத்திய புடவையுடன் கண்களில் நீர் வழிய எங்கோ பார்வை நிலை குத்த அமர்ந்திருந்தார் கலைவாணி.
அப்போது அந்த அவசர சிகிச்சை பிரிவின் கதவு படீர் என திறந்து கொண்டது. வாயிலில் நின்ற செவிலி, “வேதநாயகம் அடென்டர் இருக்கீங்களா? டாக்டர் கூப்பிடறார்.” என கத்தவும், அதில் நாசூக்காக தன் கண்களை துடைத்துக் கொண்டு தட்டுத் தடுமாறி எழுந்து நின்றார் கலைவாணி.
அடுத்த நிமிடம், இரண்டு செவிலிகள் புடைசூழ வேகமாக வந்தமருத்துவர் “இங்க பாருங்கம்மா, உங்க வீட்டுகாரர்க்கு மேஜர் அட்டாக் வந்திருக்கறதால பைபாஸ் சர்ஜரி செஞ்சிருக்கோம். எங்களால எதையும் இப்பத்திக்கு சொல்ல முடியாது. நாங்க முடிஞ்சதை செஞ்சுட்டோம். இனி அந்த கடவுள் கைல தான் இருக்கு.” என தன் வழக்கமான இயந்திர குரலில் இயம்பினார்.
தன் கணவன் பிழைத்து விட வேண்டும் என மனதில் எல்லா தெய்வங்களிடமும் வேண்டுதல் வைத்துக் கொண்டிருந்த கலைவாணிக்கு மருத்துவர் கூறிச் சென்ற வார்த்தைகளில் நெஞ்சு அடைத்தது.
அந்த மருத்துவருக்கு வேதநாயகத்தை போல ஆயிரம் நோயாளிகளை காக்கும் பணி. அதனால் சாதாரணமாக சொல்லி விட்டு சென்று விட்டார். ஆனால் கலைவாணிக்கு அப்படி இல்லையே! தன் மொத்த குடும்பத்தின் ஆணி வேரே கணவன் தானே!
திருமண மேடை வரை வந்து நின்ற தங்கள் மூத்த மகளையும், இப்போது தான் கல்லூரி படிப்பின் முதல் ஆண்டில் காலடி வைத்திருக்கும் இளைய மகளையும் வைத்துக் கொண்டு தன்னந்தனியாக எப்படி வாழ்க்கையை எதிர் கொள்வதென்ற பயம் மனதை பீடிக்க நடுநடுங்கி போனார்.
அப்போது கையில் அன்னைக்கான உணவுப் பையுடன் முகத்தில் கலக்கத்தை சுமந்தபடி வந்து சேர்ந்தாள் அவர்களின் மூத்த மகள் ரம்யா.
“டாக்டர் ஏதாவது சொன்னாங்களா? அப்பாவுக்கு இப்போ எப்படி இருக்கு?” என வரிசையாக கேள்விகளை அடுக்கியவளை பார்க்க பார்க்க அவருக்குள் அமிழ்திருந்த இயலாமை கோவமாக வெடித்தது.
“உன்னால தான்டி உன் ஒருத்தி கவலையால தான்டி என் புருஷன் நெஞ்சு புடிச்சுகிட்டு சாஞ்சாரு. என் தாலியை அறுக்கவே வந்து சேர்ந்தியா?”
என கத்தியபடி அவள் கன்னத்தில் ‘பட் பட் பட்’ என அடித்தார். அன்னை அடித்ததை விட அவரது வார்த்தைகள் பெண்ணவளுக்கு மிகுந்த வலியை தந்தது போல.
கொண்டு வந்த உணவு கூடையை பக்கத்தில் இருந்த இருக்கையில் வைத்து விட்டு முகம் கன்ற அமைதியாக அந்த வெராண்டா மூலையில் அமைந்த ஜன்னலை ஒட்டி நின்று கொண்டாள்.
ஜன்னல் வழியே தெரிந்த மேகம் மழை வருவதற்கு அறிகுறியாக சற்று மூட்டமாக காணப்பட்டது. அவளின் நைந்த மனத்தை பிரதிபலித்தமேகக் கூட்டங்களையே வெறித்துக் கொண்டிருந்தவளின் மனம் தன் தாயின் குற்றச்சாட்டில் கிளறி விடப்பட்ட இதயத்தின் ரணங்களை மீண்டும் ஒருமுறை அலசி ஆராய்வதற்காக பின்னோக்கி பயணித்தது.
மேல் தட்டு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த குடும்பம் தான் ரம்யாவினுடையது. அன்பான பெற்றோரின் முதல் பெண்ணாக பிறந்தவள், கணினி கல்வியில் இளநிலை பட்டம் முடித்திருந்தாள்.
அடுத்து முதுகலை பட்டம் படிக்க ஆசைபட்டவளின் கனவை பெற்றவர்களின் திருமண ஆசை ஜெயித்து விட்டது.
‘உனக்கு கீழே தங்கச்சி இருக்காங்கடா. நீ முதல்ல செட்டில் ஆனா தான், அடுத்தடுத்து அவளை செட்டில் பண்றதை பத்தி நாங்க யோசிக்க முடியும்’
என தங்கள் கடமையை நிலை நிறுத்தி பேசியவர்களிடம் தன் மறுப்பை ரம்யாவினால் ஒரு அளவுக்கு மேல் காட்ட முடியவில்லை.
அதன்பிறகு நடந்த சம்பவங்கள் எல்லாம் மாட்டுச் சந்தையில் மாடு பிடிப்பது போன்று நடந்த பேரம் மட்டும் தான். ரம்யா பெயருக்கு ஏற்றது போல ரம்யமான குணம் கொண்ட பெண். எனினும் திருமணச் சந்தையில் ஆணாகட்டும் பெண்ணாகட்டும் வெறும் குணத்தை மட்டும் வைத்து திருமணம் நிர்ணயிக்கப் படுவதில்லையே!
படிப்பு, செல்வ நிலை, குடும்ப பின்னனி, வேலை என எல்லாம் ஒத்து வந்தாலும் உருவத் தோற்றம் அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராயப்படும் கொடுமை இன்னும் நிகழ்ந்து கொண்டு தானே இருக்கிறது.
ரம்யா மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன? லேசாக பூசியது போன்றவளின் உடல்வாகும், சராசரி பெண்களை விட சற்று உயரம் குறைந்து, மாநிறத்துக்கும் கீழாக காட்சி தந்தவளின் தோற்றம் திருமண தராசில் அவளை சற்று தாழ்த்திவிட்டது.
அதனாலேயே வந்த வரன்கள் அனைத்தும் தட்டி போக எஞ்சிய மாப்பிள்ளை வீட்டார்களும்
‘எங்க பையன் அரசாங்க வேலையில இருக்கான். உங்க பொண்ணு கொஞ்சம் நிறம் கம்மியா இருந்தாலும் கலையா தான் இருக்கா. இருந்தாலும் ஒரு 25 பவுன் அதிகமா போட்டிருங்க’
என கூற, இன்னும் சிலர்
‘பொண்ணு குள்ளமா இருக்கா. எங்க பையனுக்கு பொருத்தம் கம்மி தான். என்ன இருந்தாலும் நம்ம ஜனமா போயிட்டீங்க. அதனால பரவாயில்லை. ஆனா பையன் பிசினஸ் ஆரம்பிக்கறதா இருக்கான். ஒரு பத்து லட்சம் மட்டும் சீதனமா தந்துடுங்க’
என இப்படி ஒவ்வொருமுறையும் அவளை வைத்துக் கொண்டே கூசாமல் பேரம் பேசினர். அந்த சொற்களில் அனலில் இட்டது போல துடி துடித்தது ரம்யாவின் உள்ளம்.
ஒருமுறை வந்தவர்களின் பேச்சை சகிக்க முடியாமல்“உங்க பையனோட குடும்பம் நடத்த தானே பொண்ணு தேடுறீங்க?”என வெடுக்கென கேட்டு விட்டாள்.
ஆனால் அதன்பிறகு அவள் பெற்றோர்களிடம் மண்டகப்படி வாங்கியது கொஞ்ச நெஞ்சமில்லை.
‘நீ என்ன பெரிய உலக அழகியா? இது எல்லாம் உலக வழக்கம் தான். மாப்பிள்ளைவீட்டாளுங்கன்னா அப்படி தான் இருப்பாங்க. பின்ன உன்னை சும்மா கல்யாணம் கெட்டிகிட்டு போவாங்களா?’
என்ற தாயின் வார்த்தைகள் அவளது சுயமரியாதையை முற்றும் முறித்து போட்டிருந்தது.
அதில் மனம் வெதும்பி இருந்தவளை இன்னுமும் நெருக்கியது தாயின்
“ஏதோ வைட்டனிங் ட்ரீட்மெண்ட்டாம். போய் பண்ணிட்டு வந்துடேன்…”
“ஏதோ புதுசா வெயிட் லாஸ்க்கு ஹர்பல் பவுடர் வந்துருக்காம். உனக்காக வாங்குனேன். இந்தா குடி…”
என ஏதோ ஒடுக்கு விழுந்த பாத்திரத்தை அங்கு இங்கு தட்டி சரி செய்வது போல அவளது புறத் தோற்றத்தை மாற்ற தலையால் தண்ணீர் குடித்தார் கலைவாணி.
பதிலுக்கு முகத்தை சுணக்கியவளிடம்,
“இதுக்கெல்லாம் முகத்தை சுணக்குனா எப்படி கல்யாணம் ஆகும்.” என எரிந்து விழுந்தார்.
“தோலை வெளுக்க வைக்கிற ட்ரீட்மென்ட் எல்லாம் பண்ணா ஸ்கின் கேன்சர் வர வாய்ப்பு இருக்கும்மா. நான் நல்ல ஆரோக்கியமா தானே இருக்கேன். அப்புறம் எதுக்கு என்னை டயட் இரு வெயிட் லாஸ் புரோகிராம்ல சேருனு உயிரெடுக்குற?”
என கடுப்பாக கேட்ட மகளிடம்
“ஏன் செலிபிரிட்டீஸ் எல்லாம் யூஸ் பண்றாங்க இல்ல. அவங்க எல்லாம் செத்தா போயிட்டாங்க?” என புரியாமல் பேசினார் அன்னை.
‘‘அவர்களுக்கு தங்கள் உடற்கட்டு குலையாமல் பராமறிப்பது தான் வேலையே! அதுவும் இல்லாமல் உண்மையிலேயே அவர்கள் விளம்பரப்படுத்தும் பொருட்களை எல்லாம் அவர்கள் உபயோகப் படுத்துகிறார்கள் என்று என்ன நிச்சயம்?’
என தன் தரப்பை புரிய வைக்க முயன்றவளுக்கு தோல்வி மட்டும் தான் மிஞ்சியது.
ஆனாலும் நிர்தாட்சண்யமாக அன்னை கூறிய அழகியல் சிகிச்சைகளுக்கு உடன்பட மறுத்தவள், அவரின் ஜாடை பேச்சுகளில் தன் தன்னம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக சிதைய பெற்றாள்.
பள்ளி கல்லூரி காலங்களிலும் ஒருவித உருவகேலி நிற பேதங்களை அனுபவித்திருந்தாலும், அவற்றை ஒருவித நிமிர்வுடன் கடந்து வந்த ரம்யாவுக்கு இது பெரிய அடி.
“ஏ கருவாச்சி…”
“எந்த கடையிலே நீ அரிசி வாங்குற?”
என்பது போன்று கேலி செய்பவர்களை,
‘என் தோலோட நிறம் என்னன்னு தினம் தினம் கண்ணாடி பார்க்குற எனக்கு நல்லாவே தெரியும். அதை நீ கத்தி எனக்கு நியாபகப்படுத்தனும்னு அவசியம் இல்ல.’
‘நான் எந்த கடையில அரிசி வாங்குனா உனக்கென்ன? நீயா வாங்கி தர போற?’
என பிலுபிலுவென பிடித்து கொள்வாள்.
நண்பர்களின் இந்த கேலியை பற்றி ஒருமுறை தங்கள் வகுப்பு ஆசியரிடம் புகார் அளித்த போது,
“இந்த கேலி கிண்டல் எல்லாம் பிரண்ட்ஸ்குள்ள சகஜம். சின்ன விஷயத்தை ஏன் பெருசாக்குற? பீ ஸ்போட்டிவ்.”
என அவள் மனநிலை புரியாது அறிவுரை கூறவும், பதின் வயது ரம்யாவுக்குள் எதுவோ ஒன்று உடைந்தது.
‘இது சின்ன விஷயம் கிடையாது, என்னை அவங்க அப்படி கூப்பிடுறது எனக்கு கஷ்டமா இருக்கு.’ என கத்த வேண்டும் போல இருந்தது.
ஆனால் கல்லூரியில் காலடி எடுத்து வைத்த சமயம் அந்த உருவ கேலியின் மற்றொரு பரிமாணத்தை சந்திக்க நேர்ந்தது.
கல்லூரியில் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க தெரிவு நடக்க, அதில் கலந்து கொண்டவளிடம்
“ரம்யா யூ ஆர் டூ டார்க் பார் திஸ் ரோல். இந்த கேரக்டர்க்கு சிவப்பா இருந்தா தான் நல்லா இருக்கும்.” என அனைவர் முன்னிலையிலும் முகத்துக்கு நேராக கூறி நிராகரிக்கப்பட்டாள்.
ஒரு சின்ன கல்லூரி நிகழ்ச்சிகளில் கூட நிற பேதம் தலை விரித்தாடுவதை கண்டு திடுக்கிட்டவளுக்கு, அப்போது தான் சினிமா முதல் விளம்பரம் வரை அனைத்திலும் நல்ல நிறமாக இருக்கும் பெண்களே பெரும்பான்மையாக வெற்றி பெற்று கோலோச்சுவது நடுமண்டையில் ஆணி அடித்தது போல உரைத்தது.
ஆனால் அந்த கதாநாயகிகளுடன் உடன் நடிக்கும் நாயகன் கருப்பாக இருந்தாலும் ரசிகர்களால் கொண்டாடப்படுவதை கண்டவளுக்கு அப்படி ஒரு ஆதங்கம் மேலிட்டது.
ஆண்கள் கருப்பாக இருந்தால் ஏற்றுக் கொள்ளும் இச்சமூகம் பெண்கள் மீது மட்டும் இந்த நிற பாகுபாட்டை திணிப்பது ஏன் என்ற கேள்வி எழாமல் இல்லை?
அதுவும் ஒரு வாரத்துக்கு முன்பு யாரோ உறவினர் தங்கள் மகளின் குழந்தை பிறப்பு பற்றி கூற அழைத்திருந்த போது, தன் அன்னை இயல்பாக கேட்ட
“அப்புறம் குழந்தை நம்ம விமலா மாதிரி நல்ல சிகப்பா இருக்குது தானே?” என்ற கேள்வியில் திடுக்கிட்டாள்.
பிறந்த பச்சிளம் குழந்தையை கூட இந்த நிற பேதம் விடாமல் தொரத்துவதை எண்ணி நெஞ்சம் தகித்தது.
ஆனால் அடுத்த நிமிடமே, அழகு என்பது நிறம் சார்ந்தது அல்ல. மனித உணர்வுகளை விலை பேசி அப்படி ஒரு கட்டமைப்பை இந்த சமூகம் உருவாக்கி இருக்கிறது என்பது மட்டும் புரிந்தது.
இல்லாவிட்டால் கோயிலில் வழிபடும் தெய்வச் சிலைகளை மட்டும் ஏன் பாகுபாடின்றி கருங்கல்லில் செதுக்க படுகிறது?
இது போல பல கேள்விகள் அவள் மனதை வண்டாக குடைய தன்னுடன் வாழ்க்கை முழுவதும் பயணிக்கும் துணை தேடும் படலத்தின் முக்கிய அம்சமாகவே நிறமும், உடல் எடையும் மாறி போனதை ஜீரணிக்கவே இயலவில்லை.
அதிலும் துணை தேடும் இணைய சேவை மையங்களில் கூட பலர் பெண் வெள்ளையாக, ஒல்லியாக, உயரமாக இருக்க வேண்டும் என்பதையே முக்கிய எதிர்பார்ப்பாக குறிப்பிட்டு பதிந்திருப்பதை பார்த்தவளுக்கு ஒருநிமிடம் மனிதர்களையும் விலங்குகள் போல கடவுள் நிறக்குறுடாக படைத்திருக்கலாமோ என்ற எண்ணம் ஆட்கொண்டது.
ஒருவழியாக அவளின் நீண்ட காத்திருப்புக்கு பிறகு ஒரு வரன் தகைந்து வருவது போல இருந்தது. அதற்காக தயாராகிக் கொண்டிருந்தாள் ரம்யா.
ஊடக விளம்பரங்களில் கருப்பாக இருக்கும் பெண் வேலை கிடைக்காமல், திருமணம் ஆகாமல் தாழ்வு மனப்பான்மையுடன் வலம் வருவது போலவும், அதே பெண் சிவப்பாக கிரீம்கள், அலங்கார பொருட்கள் பயன்படுத்தி, தன் தன்னம்பிக்கையை மேம்படுத்தி அதே வேலை, திருமணம் பேன்ற விஷயங்களை கைகூட பெறுவது போன்று காட்டப்படும் காட்சிகளை பார்க்கும் போது
‘நாங்க எங்க நிறத்தை மாத்தணும்னு உங்க கிட்ட கேட்டமாடா? ஏன்டா இப்படி மனுஷனோட உணர்வுகளை வியாபாரம் ஆக்குறீங்க?’ என சட்டையை பிடித்து கேள்வி கேட்டு அந்த விஷவித்தை கலைய தோன்றும்.
அப்படிப்பட்டவளை இன்று கலைவாணி அதீத ஒப்பனை செய்ய வற்புறுத்திக் கொண்டிருந்தார்.
மனதின் இறுக்கம் கடுகடுப்பாக முகத்தில் பிரதிபலிக்க, ஆயத்தமானவளின் காதுகளில் நாராசமாக வந்து விழுந்தது,
“இங்க பாருங்க எனக்கு எங்க பையனுக்கு நல்ல சிகப்பான புள்ளையா பார்த்து கட்டணும்னு ஆசை. அப்போ தானே பொறக்குற பிள்ளைங்க நல்லா கலரா பொறக்கும்…” என நீட்டி முழங்கிய வயதான பெண்மணியின் மண்டையை உடைக்க ரம்யாவின் கைகள் பரபரத்தது.
அவரை சடாரென தலை நிமிர்த்தி பார்த்தவளின் பார்வை அவர் பக்கத்தில் திராவிட நிறத்தின் மொத்த இலக்கணமாக அமர்ந்திருந்த அவரது மகனை பார்வையால் அளந்தது.
‘ஓஹ் உங்க பையன் கருப்பா இருந்தாலும் வர மருமக நல்ல நிறமாக இருக்கனும். அப்படி நிறமா வந்த மருமகள் நிறமட்டா பிள்ளையை பெத்தா என்ன செய்வீங்க? எங்க வாரிசில்லைனு உதறிடுவீங்களோ?’
என நுனி நாக்கு வரை வந்து விட்ட வார்த்தைகளை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள் பாவை.
தன் சிந்தனையோட்டத்தில் திளைத்திருந்தவளை தரை இறக்கியது
“ஆனா பாருங்க உங்க பொண்ணு கருப்பா இருந்தாலும் ஏதோ லட்சனமா இருக்கா. போதாததுக்கு ஜாதகமும் நல்ல பொருந்தி இருக்கு. நீங்களும் நல்ல குடும்பமா தெரியறீங்க. அதனால தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கறேன்.”
என்ற மாப்பிள்ளையின் அம்மா கனகவல்லியின் வார்த்தைகள்.
அதை தொடர்ந்து அவர் பட்டியலிட்ட வரதட்சனை மற்றும் சீதனங்களின் வரிசையை கேட்க கேட்க ரம்யாவுக்கு மலைப்பாக இருந்தது.
விட்டால் இந்த திருமணமும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம் என்று எங்காவது ஓடி விடலாம் போல இருந்தது.
ஆனால் அவர் கேட்ட அனைத்துக்கும் சரி சரி எனஒத்துக் கொண்டு தலையாட்டும் பெற்றவர்களை பார்க்கும் போது ஒருவித குற்றக் குறுகுறுப்புக்கு ஆளானாள் பெண்.
‘கருப்பாக பிறந்தது அவள் தவறா? அதற்காக வாழ்க்கை முழுவதும் இந்த மூச்சு முட்டும் உணர்வை அனுபவித்தே ஆக வேண்டுமா?‘
‘ச்சைக் இப்படி ஒரு கல்யாணம் தேவையா?’
என்ற உறுத்தல் பூதாகரமாக எழுந்தாலும், பெற்றவர்களிடம் முகத்தில் விரவி படர்ந்திருந்த ஒரு வித மகிழ்ச்சியையும் தாண்டிய நிம்மதி உணர்வு அவளை மௌனி ஆக்கி விட்டது.
திருமண நாள் குறிக்கப்பட்ட பிறகும்கூடஎதிலும் பிடிப்பில்லாமல் ஒரு வித உறுத்தல் மனதை ஆட்கொள்ள வலம் வந்தாள் பெண். அவள் அலைப்புறுதல் அப்போது தான் தந்தை வேதநாயகத்தின் கண்களில் பட்டது.
அதிகமாக பிள்ளைகளுடன் ஒட்டி உறவாடா விட்டாலும் அவர்கள் மீது அன்பு கொண்ட சராசரி இந்திய தந்தை தான் அவர்.
தன் குடும்பத்துக்காக உழைத்து பொருளீட்டுவது மட்டுமே தன் தலையாய கடமையாக கொண்டவர், வீட்டின் நிர்வாகம், பிள்ளைகளின் வளர்ப்பு, தொடங்கி மகளுக்கு வரன் தேடுவது வரை அனைத்து பொறுப்புகளையும் மனைவியிடம் தந்திருந்தார்.
இப்போது மகளின் முகத்தில் திருமணம் நிச்சயமானதுக்கான சந்தோஷத்தை காணாது தேடி களைத்தவர்,
“ஏன் வாணி நம்ம ரம்யாக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் தானே. ஏன் ஒரு கல்யாணக் கலையே அவ முகத்தில இல்ல?” என மனைவியிடம் வினவினார்.
பதிலுக்கு “நம்ம சக்திக்கு மீறி சீர் செய்ய போறோம்னு விசனப்படுறா போல. விடுங்க கல்யாண நாள் நெருங்க நெருங்க சரி ஆகிடும்.” என தானே ஒரு காரணத்தை கற்பித்து கணவனை சமாதானப்படுத்த முயன்றார்.
இதோ அதோ என இறக்கை கட்டிக் கொண்டு நாட்களும் பறந்தது. அப்போது தான் திருமணத்துக்கு ஒரு பத்து பதினைந்து நாட்கள் இருக்கும் போது இடியாய் வேதநாயகத்தின் தலையில் இறங்கியது அச்செய்தி.
தொழிலில் ஏற்பட்ட திடீர் நஷ்டத்தால் கனகவல்லிக்கு வாக்கு கொடுத்தபடி சீதனங்களை செய்ய முடியாது மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளானார்.
கனகவள்ளியை தொடர்பு கொண்டு தங்கள் நிலையை அவரிடம் விளக்க முயன்றனர்.
“எப்படி சீதனம் எல்லாம் செய்வீங்க?” என அந்நிலையிலும் மனிதாபிமானமின்றி கேட்டவரிடம்,
“முதல்ல கல்யாணம் நடக்கட்டும்ங்க சம்மந்தி. எப்படியாவது எங்க தலையை அடமானம் வச்சாவது நீங்க கேட்ட சீர் செனத்தி எல்லாம் செய்யுறோம். கொஞ்சம் டைம் தாங்க.” என கெஞ்சினார் வேதநாயகம்.
அப்போதைக்கு அவர்களுக்கு பிடி கொடுக்காமல் பேசி அனுப்பினார் அந்த பெண்மணி. அதில் நம்பிக்கை இழந்தார் வேதநாயகம். அடி மேல் அடி விழுந்த அதிர்ச்சியில் இதயத்தில் சுரீர் என்ற வலி தாக்க, நெஞ்சை பிடித்துக் கொண்டு சாய்ந்தார்.
இவை அனைத்தையும் மனதில் ஓட்டிப் பார்த்தவள் ஒரு நெடுமூச்செறிந்து நிகழ் காலத்துக்கு தரை இரங்கினாள். கலைவாணியிடம் ஒரு வார்த்தை கூட பேசாது அவரை உணவுண்ண வைத்தாள் ரம்யா.
தேவை இல்லாமல் வார்த்தைகளால் மகளை வசைபாடி நோகடித்ததை காலம் கடந்து உணர்ந்த அன்னைக்கு அந்த நிலையிலும் மகள் தன்னை தாங்கிய விதம் உள்ளத்தில் குற்றக் குறுகுறுப்பை விதைத்தது.
அதை தொடர்ந்து வேதநாயகத்துக்கான அவர்களின் காத்திருப்பு அடுத்த15 நாட்கள் மோசமான நகர வேதனையுடன் கழிந்தது. ஒருவழியாக உடல் தேறி வந்தவரை வீட்டுக்கு அழைத்து வந்தனர்.
அப்போது அவரை பார்க்க தன் கணவனுடன் ஆஜரானார் கனகவள்ளி. அப்படியே நிச்சயத்துக்கு அவர்கள் போட்ட நகையை திரும்ப வாங்கிக் கொண்டு
“நல்ல காரியம் பண்ணுறப்ப இப்படி வரிசையா அபசகுணமா நடந்தது எங்க மனசுக்கு ஒப்பலை. நாங்க வேற இடம் பார்த்துக்கறோம்.” என சப்பை கட்டு கட்டினார்.
ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்று தான் என்றாலும் கலைவாணிக்கு எப்படியாவது மகள் திருமணம் நடந்து விடாதா என்ற ஆதங்கம் தலை தூக்கியது.
“கொஞ்சம் யோசிங்க சம்மந்தி.” என அந்நிலையிலும் அவர்களிடம் இறைஞ்சிய தாயை கண்டு ரம்யாவுக்கு பொங்கி விட்டது.
“அம்மா எதுக்கு அவங்க கிட்ட இப்படி கெஞ்சிட்டு இருக்கீங்க?” என சினந்தவளின் பொறுமை பறிபோனது.
ஒரு நகை பெட்டியை அவர்கள் கையில் திணித்த, “நீங்க போகலாம்.” என வாசலை கை காட்டினாள்.
“இப்படி ஏப்ப சப்பையா இருக்கும் போதே இந்த திமிரு. இனி கொஞ்சம் நிறமா இருந்துட்டா உன்னை எல்லாம் கைல பிடிக்க முடியாது.” என அவளை அவமானப்படுத்தியவரை கூர்ந்து
“காசுக்காக பையனை விக்க பார்த்தவங்களுக்கு என் உருவத்தை பத்தி பேச அருகதை இல்ல. நீங்க போகலாம்.” என தக்க பதிலடி தந்து அனுப்பினாள்.
அதன் பிறகு பொலிவிழந்த மயான அமைதியை தத்தெடுத்தது அந்த வீடு. தன் தலையை கையில் தாங்கியபடி நொறுங்கி போய் அமர்ந்திருந்த தந்தையிடம் வந்தவள் அவர் முன் மண்டியிட்டு அமர்ந்தாள்.
“அப்பா” என விழித்து அவர் கவனத்தை தன் பக்கம் திருப்பியவள்
“சாரி ப்பா… ஆனா எனக்கு இப்படி ஒரு கல்யாணம் வேணாம் ப்பா. நான் கருப்பா இருக்கேன்னு தானேப்பா அவ்ளோ வரதட்சணை கேட்டாங்க. நீங்களும் அம்மாவும் எப்படியோ பொறுப்பு முடிஞ்சா போதும்னு தானே ப்பா அவங்க கேட்டதுக்கு எல்லாம் சரினு தலையாட்டுனீங்க.”
என அத்தனை நாள் தன் மனதில் அடைத்து வைத்திருந்ததை எல்லாம் மடை திறந்த வெள்ளமாக கொட்டினாள்.
மகள் திருமணம் நின்றுவிட்ட ஆற்றாமையில் இருந்த கலைவாணிக்கு அவள் பேச்சு சகிக்க வில்லை.
“ரம்யா” என அதட்டியவரை கண் பார்வையில் அடக்கி விட்டார் வினாயகம்.
“எனக்கும் கல்யாண ஆசை இருந்துச்சுப்பா. ஆனா வரவங்க என் நிறத்தை வச்சு பேரம் பேசினப்ப என் ஆசை எல்லாம் செத்து போச்சுப்பா. நாட்டுல கருப்பா இருக்க பொண்ணுங்களுக்கு எல்லாம் காசு இல்லாட்டி கல்யாணமே நடக்காதா ப்பா?”
என கேட்டவளின் கண்களில் உவரி நீர் கோடாக வழிந்து கன்னத்தை நனைத்தது.
இப்போது அன்னையின் அதிருப்தி நிறைந்த பார்வையை சந்தித்தவள்,
“நியூஸ்ல ஒருவாட்டி எங்கயோ அமெரிக்கால யாரோ ஒரு போலிஸ்காரர் ஒரு கருப்பினத்தவரை காலை வச்சு அழுத்தி கொண்ணுட்டாங்கனு நீங்க எல்லாம் இங்க எவ்ளோ பொங்குனீங்க. இப்படியா இன வெறி நிற வெறி புடிச்சு திரிவாங்கனு அவ்ளோ பீல் பண்ணீங்க”
என கூறியவள் தொடர்ந்து அவரிடம் வந்து
“அதே உங்க பொண்ணை ஒருத்தர் வந்து பார்த்துட்டு கருப்பா இருக்கா, குள்ளமா இருக்கா, குண்டா இருக்கானு குத்தம் சொல்லிட்டு போனப்ப ஏன்ம்மா நீங்க ஒரு வார்த்தை பேசலை. எப்படியோ கல்யாணம் ஆனா போதும்னு அவங்க டிமேன்ட்க்கு ஏத்த மாதிரி என்னை தானே மாத்த முயற்சி செஞ்சீங்க.” என கேட்டவளின் வார்த்தைகள் அவரை சுட்டது.
தங்கள் பிள்ளையை தாங்களே விட்டுக் கொடுத்தது போல நடந்து கொண்டதை கால தாமதமாக உணர்ந்த கலைவாணி கூனி குறுகினார்.
அவள் அடைந்த வலியும் வேதனையும் உணராது நடந்துக் கொண்டதை எண்ணி வெட்கிய பெற்றவர்கள் இருவரும் மன்னிப்பை யாசித்தனர்.
ஒரு மெல்லிய புன்னகையை உதிர்த்து
“நீங்கனு இல்லம்மா இந்த சமுதாயத்துல நிற பேதத்தையும் உருவ கேலியையும் நார்மலைஸ் பண்ணிட்டோம். சினிமா தொடங்கி டிவி ஷோஸ் வரை நகைச்சுவைங்கற பேருல ஒருத்தங்கள மனசு நோக கிண்டல் கேலி செய்யுறதை வழக்கமாக்கிட்டோம். இதெல்லாம் உடனே மாறாது. ஆனா அந்த மாற்றத்தை நம்ம கிட்ட இருந்து கொண்டு வரலாமே.”
என்றவளின் மனம் அறிந்து நடக்க முடிவாற்றினர் அவளது பெற்றோர்கள்.
மாற்றம் ஒன்றே மாறாதது. அந்த மாற்றத்தை நம் ஒவ்வொருவர் வீட்டிலும் விதைப்போமே!
சுபம்.