எனக்கு கொலை செய்யனும்னு ரொம்ப நாளா ஆசை.. அதிகமா மர்டர் ஸ்டோரீஸ் படித்ததனாலோ என்னவோ இந்த மாதிரியான விபரீத ஆசை.அதோட யாரு கொலையாளின்னு யாராலையும் – கணேஷ், வசந்த், ஷெர்லாக் ஹோம்ஸ், ஹெர்க்யூல் பாய்ரோ உட்பட யாராலையும் கண்டேபிடிக்கமுடியாதபடி பண்ணவேண்டும் என்பதும் ஒரு கொசுரு ஆசை. கொலைங்கர ஒரு த்ரில்லிங்கான விஷயத்தை அனுபவிக்கனும்னு ஆசையே தவிர, இன்னாரை கொலை செய்யனும்னு கிடையாது. ஆனாலும் அவன்மேல் எனக்கு வெறுப்பு இருந்து அவனை கொலை பண்றதுல ஒரு மகிழ்ச்சி இருந்தா இன்னுமே நல்லாயிருக்குமேன்னு நினைச்சேன். ஆனா கொலைகாரனை காட்டிக்கொடுக்கும் முக்கியமான “ மோட்டிவ்” ஆப்வியஸா இல்லாதபடி என்னோட டைரக்டா சம்பந்தமில்லாத ஒரு ஆளை தேர்ந்தெடுக்க யோசித்தேன். எனக்கு உடனே தெருமுக்கு நாயர் நினைவு வந்தது. முப்பத்தைந்து வயதுக்கு மேல் கட்டகுட்டையா வழுக்கைத்தலையோட இருக்கும் நாயரை நான் வெறுக்கும் காரணம்? அதை சொல்லும்முன் என்னைப்பற்றி.. “ 28 year old tall handsome IIT graduate working in US IT company earning Rs 25 lacs…..” என்று தொடங்கும் அந்த போனவார ஹிண்டு மேட்ரிமொனியல் விளம்பரம் படித்தீர்களா? அது நான் எனக்காக கொடுத்ததுதான். நாலாவது தடவையா கொடுத்தது. அதற்குமுன் தமிழ் மேட்ரிமோனியல், ஷாதி டாட் காம் போன்றவற்றிலெல்லாம் போட்டாச்சு. அதுக்கு முன்னாடி அம்மா பாத்து பாத்து வெறுத்து போய் நீயே பாத்துக்கோடா ன்னு சொல்லிட்டா. ஆனா ஒன்னும் செட்டாகல. எல்லாம் வத்தலும் தொத்தலுமா வருதேன்னு நொந்து போனவாரம் மாடி ஜன்னல் வழியா வெளியே பாக்கும்போது இந்த வழுக்கைத்தலை நாயர் அழுக்கு லுங்கிய மடிச்சு கட்டிகிட்டே வீட்டிலேர்ந்து வெளியே வரான். அவன்பின்னாடி தள தளன்னு, பிருஷ்டபாகம்வரை கரு கருன்னு நீண்டு விரிந்த கூந்தலுடன் எலுமிச்சை கலரில் நயன்தாரா ஜாடையில் ஒரு இளம் பெண். “ ஆஹா கெடச்சாச்சு கெடச்சாச்சு” ன்னு ஃபெவிகால் விளம்பரத்தில் கத்திக்கொண்டே ஓடும் மீனவன்போல நான் மாடியிலிருந்து தட தடன்னு இறங்கி ரோடில் நாயரை மறித்து “ எந்தா நாயரே சுகந்தன்னே” என்று அந்த பெண்ணை பார்த்து சிரித்தவாரே கேட்டேன்.
“ ஆஹா பரம சுகம்.. “ என்று கிளம்பியவனை நிறுத்தி
“ பின்னே ..ஈ..சேச்சி..” மீண்டும் அவளை பார்த்து சிரித்தேன்.
“ ஓ.. இவ என்ட பாரியா.. போனவாரம் கொச்சி போனேன். அவ்வட சடன்னா கல்யாணம் ஆயி…”என்றவுடன் காற்றுப்போன பலூன்போல சுருங்கி வீட்டுக்குள் நுழைந்தேன். அடப்பாவி உனக்கெல்லாம் கிடைக்கிற வாழ்வு , தி மோஸ்ட் எலிஜிபிள் பாச்சிலரான எனக்கு ஏன் கிடைக்கமாட்டேங்கறது என்று ்அன்று முழுவதும் அரற்றிக்கொண்டே இருந்தேன். என்னோட முதல் சாய்ஸ் நாயர் ஏன் என்று இப்பொழுது புரிந்திருக்கும். ஆனால் சிறிது யோசித்து அவர் வேண்டாமென தீர்மானித்தேன். அடிக்கடி அந்த நயன்தாராவை பார்த்து ஜொள்ளுவிடுவதை அவள் கண்டு கொண்டுவிட்டாளென எனக்கு சந்தேகம். அதனால் ‘ உங்களுக்கு யார் மீதாவது சந்தேகம் உண்டா’ என்று போலீஸ் கேட்டால் என்னை காட்டிகொடுப்பாள் என்று தோன்றியது. வேறு யார் என்று யோசிக்கும்போது பளிச்சென்று சுதாகர் ரெட்டி நினைவிற்கு வந்தான். கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்குமுன் எங்களோட IITM campus இன்ட்டர்வ்யூக்காக ஒரு ட்ரீம் கம்பெனியின் HR ஹெட் என்றமுறையில் இந்த ரெட்டி வந்தான். நான் ரிட்டன் டெஸ்ட், டெக்னிகல் இன்டர்வ்யூ எல்லாம் சூப்பராக முடித்து வேலை நிச்சயம் என்று நினைத்து கடைசி HR இன்டர்வ்யூக்கு உள்ளே நுழைந்த என்னை இந்த ரெட்டி ஒரு பூச்சியை பார்ப்பதுபோல் பார்த்த பார்வையிலேயே அவனை வெறுக்க ஆரம்பித்தேன். என்னுடைய பேப்பரை திருப்பி திருப்பி பார்த்துவிட்டு “ I think you are weak in English” என்றவுடன் எனக்கு சுர்ரென்று ரத்தம் தலைக்கேறியது. எங்க campusலேயே நான்தான் இங்கிளீஸ் புலவன்.
“ Why do you think so sir?” என்றேன் கோபத்தை கட்டுப்படுத்தி.
“You did not got good marks in English in SSLC “
‘அடப்பாவி நீ பேசற இங்கிளீஸே தப்பேடா’ என்ற மைன்ட் வாய்ஸை அடக்கி “ I was down with viral fever that time” என்றேன்.
இளப்பமா சிரிச்சு “ usual excuse.. now tell me how do you arrange 4 floor pots at equidistant from each other”
என்னுடைய கோபம் இப்போ முற்றினதால் அந்த கேள்வியை சரியா புரிஞ்சுக்காம அவசரமாக “ of course arrange it as a square “ என்றவுடன், ஏதோ பெரிய ஜோக்கை கேட்டது போல இடி இடி ன்னு சிரிக்க ஆரம்பித்தான். அப்போதான் நான் பண்ணின தப்பு புரிந்தது. ஆனால் என் கோபம் தலைக்கேறியதாலும் எனக்கு ஏற்கனவே இன்னொரு கம்பெனியின் ஆஃபர் இருந்ததாலும், மெதுவாக எழுந்து “ Excuse me sir. Looks like you are looking for a gardener and not a software engineer. So I’m not the best fit for you. Thanks for your time. A piece of advice for you. Pl improve your English “ என்று சொல்லிவிட்டு வெளியேறினேன். அதுக்கப்புறம் அவன் பிளேஸ்மண்ட் ஆஃபிஸரிடம் கம்ப்ளைன்ட் பண்ணி என்னென்னவோ ஆச்சு. கடைசிலே எனக்கு ஒன்னும் ஆகல. நானும் அவன அப்புறம் பாக்கல. ஆனாலும் இந்த நிகழ்ச்சி என்ன ரொம்பவே பாதிச்சு இந்த சுதாகர் ரெட்டிய இப்ப நெனச்சாலும் கோபம் வருது. அதனால அவன்தான் என்று முடிவுசெய்தேன். ஆறு வருடங்களுக்குமுன் நடந்த இந்த நிகழ்ச்சியை வச்சு என்ன லிங்க் பண்ணமுடியாது. ஸோ ஆள டிசைட் பண்ணியாச்சு. அடுத்து அவன் எங்க இருக்கான் அவன் நடவடிக்கை அவன எங்கே எப்படி கொலை பண்ணலாம்னு பிளான் பண்ண இரண்டு மாதம் அவனை கண்காணித்தேன். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 7:00 க்கு மைலாப்பூர்ல உள்ள பாருக்கு வருவான். ஒரு குறிப்பிட்ட மூலையில் தனியாக உட்கார்ந்து மூணு பியர் குடிப்பான். இரண்டாவது பியர் குடித்தபின் வெளியே போய் ஒரு தம் அடித்துவிட்டு உள்ளே வந்து மூன்றாவது பியரை குடித்துவிட்டு 8:30 மணிக்கு வெளியேறிடுவான். நானும் அந்த பாருக்கு போய் அவன் சீட்டுக்கு டயக்னலா பின்னால உள்ள சீட்டில் உட்கார்ந்து அவன் தம் அடிக்க போகும்போது அந்த பியரில் சட்டென விஷம் கலந்துடனும். அவன் சீட்டுக்கு பின்னால் டாய்லட் இருப்பதால் அங்க போகறமாதிரி போய் விஷத்தை போட்டுவிடனும். இது தான் பிளான். ஒரு கூடுதல் சேஃப்டிக்காக பக்கத்திலுள்ள ஒரு சபாவில் 7 to 9 வரை நடக்கும் ட்ராமாவிற்கு டிக்கெட் வாங்கி 7:45 மணிக்கு வெளிவந்து வேலையை முடித்துவிட்டு மீண்டும் 8:30 க்கு சபாவிற்கு போய் ட்ராமா முடியும் வரை இருக்கவேண்டும். இந்த ஒரு அலிபை இருப்பது நல்லது. பிளான் போட்ட பிறகு கொடிய விஷம் எது எங்கே கிடைக்கும் என்ற விபரத்தை கூகுள் மூலம் தெரிந்து வாங்கிவிட்டேன். இன்று வியாழக்கிழமை இரவு. நாளை என் ஆசை நிறைவேறும் நாள். நான் படித்த ஏராளமான புத்தகங்களில் எப்படி கொலையாளி மாட்டிக்கறான்னு மறுபடியும் யோசித்து பார்த்தேன். மோட்டிவ், அலிபை, கொலை நடந்த இடத்தில் கிடைக்கும் தடயங்கள் இவை மூன்றுதான் முக்கியமான காரணங்கள் இதில் இந்த தடயங்கள்தான் முக்கால்வாசி காட்டிகொடுப்பது. கொலை செய்தவுடன் உண்டான பரபரப்பில் மறதியாக சில தவறுகள் செய்து மாட்டிக்கொள்வார்கள். நான் இதை பக்காவாக செய்யவேண்டும். எனவே நாளை ஏழு மணியிலிருந்து எட்டரை வரை செய்யவேண்டியதை பாயிண்ட் பாயிண்ட்டாக இப்பவே ஒரு செக் லிஸ்ட் போட்டு அதை நாளை அவ்வப்போது டிக் செய்தால் ஒன்றும் மிஸ் ஆகாது என்று எண்ணி டேபிளிலிருந்த பேடிலிருந்து ஒரு பக்கத்தை கிழித்து நிமிஷம் வாரியாக எழுத ஆரம்பித்தேன்.
இன்று வெள்ளிக்கிழமை. மாலை ஆஃபிஸிலிருந்து வீடு வந்து மணிபார்த்தேன். 5:30. செக்லிஸ்ட்டை பார்த்தேன். 5:30 take poison and keep it safely in pant pocket. வைத்துக்கொண்டுவிட்டு அந்த பாயிண்ட்டை அடித்தேன். 5:35. Leave for Mylapore Sabha by Bus ( don’t take car) செய்துவிட்டு அந்த பாயிண்ட்டையும் அடித்தேன்.
இப்போ முக்கியமான கட்டத்துக்கு அதாவது அந்த பாருக்கு வந்துவிட்டேன். சுதாகர் ரெட்டி இரண்டாவது பியரை முக்காவாசி குடித்துவிட்டான். நான் ஒரு பியரை ஆர்டர் பண்ணி ஒரு சிப் மட்டும் உறிஞ்சிவிட்டு ( ஒரு சிப்புக்கு மேல் கூடாது என்றது செக்லிஸ்ட்) அவன் வெளியேறுவதற்கு காத்திருந்தேன். இதோ அவன் வெளியேறி தம் அடிக்கிறான். நான் பையலிருந்து விஷ பாக்கெட்டை எடுத்து பிரித்து கைக்குள் அடக்கி எழுந்து டாய்லட் பக்கம் போவதுபோல் போய் அவன் டேபிள் அருகில் கொஞ்சம் தயங்கி நின்று சுற்றிப்பார்த்தேன். ஒருவரும் கவணிக்கவில்லை. சட்டுனு விஷத்தூளை அவன் பியர் மக்கில் கவிழ்த்தேன். கால் மக் பியர் கொஞ்சம் பொங்கி அமைதியாக அடங்கிவிட்டது. டாய்லெட்டுக்குள் போய் கதவை தாளிட்டுவிட்டு கையிலிருந்த விஷத்தூள் பாக்கெட்டை சுக்கு நூறாக கிழித்து டாய்லட்டில் போட்டு இரண்டுதடவை ஃப்ளஷ் செய்து எல்லா துண்டுகளும் மறைந்தபிறகு வெளியே என் சீட்டுக்கு வந்தேன். சுதாகர்ரெட்டி மூன்றாவது பியரை உறிஞ்சிகொண்டிருந்ததை சந்தோஷத்துடன் பார்த்தேன். விஷம் டேஸ்ட்லெஸ் ஆக இரூக்கும்னும், அரை மணியில் ஆளை அடிதிடும்னும் கூகுள் சொல்லியிருந்தது. வேலை வெற்றிகரமாக முடிந்துவிட்டதால் வெய்ட்டரை கூப்பிட்டு பில் பே பண்ண குடுத்துவிட்டு செக்லிஸ்ட்டை பார்த்தேன். வேலை முடிந்தவுடன் அவன் கிளம்பும்முன் பே பண்ணிவிட்டு கிளம்பு என்ற பாய்ன்ட்டை டிக் பண்ணும்போதுதான் கவணித்தேன் பேமண்ட்டை கேஷாக கொடு கிரடிட் கார்டு கூடாது என்று கொட்டை எழுத்தில் எழுதியிருந்தேன். ஐயோ மறந்துபோய் கார்டை கொடுத்து விட்டேனே. உடனே பதறி எழுந்து அந்த வெயிட்டரை துரத்தி கார்டை வாங்கி கொண்டு கேஷை கொடுத்து வெளியேறி சபாக்குள் நுழைந்தேன். நல்ல வேளை கார்டை கொடுத்திருந்தால் மாட்டியிருப்பேன். செக்லிஸ்ட் காப்பாற்றிவிட்டது. ட்ராமா முடிந்தது. என் கொலை வெறியும் தணிந்தது. வேலையை வெற்றிகரமாக முடித்ததற்கு எனக்கு நானே பார்ட்டி கொடுக்க எண்ணி தி லெதர் பாருக்குள் நுழைந்தேன். நாலு லார்ஜ் ஸ்காட்ச் கொஞ்சம் வேலை செய்ய ஆரம்பித்தவுடன் ஓலாவை அழைத்து வீட்டை அடைந்தேன். வீட்டுக்கதவை திறக்கும் போது முதுகில் தட்டி என் பெயரைச்சொல்லி “ நீங்கதானா” என்ற குரல் கேட்டு திரும்பினேன். போலீஸ்! நாலு லார்ஜ் போதையும் ஒரே நொடியில் இறங்கி உடல் பதற “ எஸ்ஸ்..நான்தான்”
“சுதாகர் ரெட்டிய கொலை செய்ததற்காக உங்களை கைது செய்கிறோம் “ என்று படேலென்று கையில் விலங்கை மாட்டினார்.
“ ஸார் என்ன விளையாடறீங்களா? நான் ஒரு அமெரிக்க கம்பபெனியின் மேனேஜர். எனக்கு சுதாகர் ரெட்டியெல்லாம் தெரியாது”
“ ஓ. அப்படியா. தெரியாமத்தான் இவ்வளவு டீடெய்லா ஸ்க்ரிப்ட் எழுதி அதையும் உங்க லெட்டர் ஹெட்டிலேயே எழுதி பண்ணியிருக்கீங்களா?”அந்த செக்லிஸ்ட்டை கண்முன் ஆட்டினான். ஓ மை காட். இது எப்படி இவன் கையில் என்று யோசிக்கும்போதுதான் நினைவுக்கு வந்தது. அந்த கிரடிட் கார்டை வாங்கும் அவசரத்தில் இதை கீழே நழுவ விட்டேன் போல. ஷிட் இந்த செக்லிஸ்ட்டில் கடைசி பாய்ண்ட்டாக வேலை முடிந்தவுடன் இந்த செக்லிஸ்ட்டை கிழித்தெறி என்று எழுத விட்டுவிட்டேனே!