ஹ….ஹ….ஹா என்கிட்டே….யே…வா.தொலைஞ்சான் …ஒரே போடா போட்டுட்டேன்” பூஜாவின் புலம்பல் சத்தம் கேட்டு எழுந்த நிஷா…லைட்டைப் போட்டுப் பார்க்கிறாள்.
புலம்பலின் சாயல் கூட இல்லாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவளைப் போல கண்மூடிப் படுத்திருக்கிறாள் பூஜா.
“ ஏ…பூஜா …பூஜா…எழுந்திருடி.என்னாச்சு ஏன் சிரிச்ச?! ஏதோ பேசினியே?!”
படபடவென தட்டி எழுப்புகிறாள் நிஷா.அவளுக்கு புலம்பியது பூஜா தானா…..ன்னு சந்தேகம் வந்து வேறெதோ தோன்ற பயத்தில் பூஜாவை உலுக்குகிறாள்.
“ ஏன்டி…என்னை எழுப்புற?!”
“ ஏ….பூஜா இங்க பாரேன்.கொஞ்சம் முன்னாடி ஏதோ கத்தினியே என்னது?!”
பல உலுக்கல்களுக்குப் பிறகு முழுசாக தூக்கம் கலைந்த பூஜா தன் அருகே வியர்வையில் நனைந்த இரவு உடையில் கலவரமாகத் தென்படும் நிஷாவைப் பார்க்கிறாள்.
“ என்ன நிஷா தூங்கலை?! ஏன் என் பெட்ல உட்கார்ந்திருக்க?!”
பூஜா பேச ஆரம்பித்ததும் சற்றே பயம் கலைந்தவளாக நிஷா பேசுகிறாள்.”போடி லூசு.நீ தான் என் தூக்கத்தை கெடுத்த”
“ ஏன் என்னாச்சு?!”
“ தூக்கத்திலேயே சிரிக்கிற.வன்மம் வச்சு பழி வாங்கின மாதிரி கத்துற?!”
“ அப்படியா?! எனக்கு எதுவும் இப்ப தோணலையே?! ஸாரி…பா.நீ தூங்கு.நான் இனிமேல் தொந்தரவு பண்ண மாட்டேன்.இப்ப தூக்கம் வருது.தூங்கலாமா?!”
“ இப்பவே மணி நாலாச்சு.இன்னும் கொஞ்ச நேரம் தான்.நானும் இங்கேயே படுத்துக்கிறேனே?!”வழக்காம ஒரே கட்டிலில் தூங்குவது பிடிக்காது என்பாள் நிஷா.இன்று ஏதோ என்னால் வந்த குழப்பம்..” சரி…நிஷா. தூங்கு”என்று சொல்லி
ஒருக்களித்து படுத்து நிஷாவிற்கு இடமளிக்கிறாள் பூஜா.
மறுபடி படுத்து தூங்கிய பூஜாவிற்கு கனவு போல் காட்சிகள் வந்து தூங்கவிடாமல் தொந்தரவு செய்கிறது.படுக்கையிலிருந்து எழுந்து உட்காருகிறாள்.கனவினை நினைவுக்குக் கொண்டு வர முயற்சிக்கிறாள்…ஏதோ படகு….அதில் நானும் நிஷாவும்.என் கையில் தடிமனான கட்டை…கீழே…அது யார் ?!போலீஸா?! கடல் போல தெரிகிறதே….?! கூடவே தண்ணீரோடு கலந்து சிதறும் ரத்தத் துளிகள்.நாங்கள் எப்படி அங்க போனோம்?! என்ன நடந்தது?!
புரியாத குழப்பத்தோடு தூக்கம் குறைந்த மயக்கத்தில் பாத்ரூம் போனவள் சட்டென்று வழுக்கி விழுகிறாள்.” ஆ…..என்ற”என்ற பூஜாவின் அலறல் சத்தம் கேட்டு நிஷா ஓடி வருகிறாள்.
“ பூஜா….! பூஜா….! என்னாச்சுடி?! கதவைத் திற…?!” பட படக்கிறாள் நிஷா.
பல முறை தட்டிய பிறகு நெற்றியில் இரத்தம் வழிய கதவைத் திறந்த பூஜா அப்படியே மயங்கிச் சரிகிறாள்.
கண்விழித்த பூஜா எதிரியல் அம்மா இருப்பதைப் பார்க்கிறாள்.” நீ எப்ப…மா வந்த?! நிஷா எங்க?! “
பூஜாவை கைத்தாங்கலாக உட்கார வைக்கிறார் அவள் அம்மா.” மெல்ல….மெல்ல கண்ணு.இப்ப எப்படிம்மா இருக்க?! வலிக்குதா?! “
“ ஆமா…மா.சுர்றுன்னு குத்துது.என்னாச்சு…மா?!”
“ என்னைக் கேட்டா….எனக்கென்னடி தெரியும்?! படிக்கிறேன் வேலை பார்க்கிறேன்னு வருசத்துல முக்கால்வாசி நேரம் ஹாஸ்டல் பி.ஜின்னு தான் இருக்க.வீட்டிலயா இருக்க என்னன்னு நான் சொல்ல?!”
கண் கலங்கும் அம்மாவை பாசத்தோடு அணைத்து அவள் மடியில் படுத்துக் கொள்கிறாள் பூஜா.
“ உனக்கு இந்த வேலை வேண்டாம் கண்ணு.வீட்டுக்கு வந்துடு.வயசுப் பொண்ண தனியா விட்டுட்டு எங்களால நிம்மதியா இருக்க முடியுமா?! இடி மின்னல் மழைன்னா கூட தனியா நீ என்ன பண்றியோன்னு தவிக்கிறோம்.”
“ நிஷா….இருக்காளே…மா.”
மெல்ல முனங்கும் பூஜா விடம்,” சற்றே வருத்தமாக…பாவம் அந்தப் பிள்ளையும் உன்னை மாதிரி தான சின்னப் பிள்ளை.பயந்து கிடக்கு.உங்களுக்கு என்ன தேவை?! பணம் சம்பாதிக்க இப்படி பரிதவிக்கிறீங்க?!”
“ அம்மா….பசிக்குது..மா”
முடியாத பிள்ளைக்கு வயித்துக் கொடுக்காமல் என் புலம்பலை ஆரம்பிச்சுட்டேனேன்னு தன்னையே நொந்து கொண்ட அம்மா பூஜாவை தலையணையில் படுக்க வைத்து விட்டு பாத்ரூமிலிருந்து தண்ணியும் கம்பும் எடுத்து வருகிறாள்.
“ வாயைத் கொப்புளி…மா.காபி தர்றேன்.”
“இதெதுக்கு..மா?!நான் பாத்ரூம் வர்றேன்.”
“ வேண்டாம் பூஜா.உனக்கு பிரஷர் அதிகமா இருக்கு.ரெண்டு நாளைக்கு பெண் ரெஸ்ட் வேணும்னு டாக்டர் சொல்லிட்டார்.”
“ பரவாயில்லை…மா.மெல்ல வர்றேன்”
அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு பாத்ரூம் போய் வருகிறாள்.
நாலாவது நாள்.” அம்மா…தம்பி ஸ்கூலுக்குப் போகணும்.அப்பா வேலைக்குப் போகணும்.நீ கிளம்பு..மா.நாங்கள் சமாளிச்சுக்கிடுவோம்”
“ ஆமா ஆன்ட்டி.நான் பார்த்துக்கிறேன்.நீங்க கிளம்புங்க.”
“ இப்பவாவது சொல்லு பூஜா.அப்படி என்ன கனவு?!”இந்த நாலு நாளும் நான் கவனிச்சேன்.நீ புலம்பின….பயப்படுற…. என்னாச்சுன்னு உண்மையைச் சொல்லு.என்னன்னு தெரியாம என்னால நிம்மதியா இருக்க முடியாது.”
“ சொல்லு பூஜா.நீயும் நானும் ரெண்டு வருசமா தங்கி இருக்கோம்.இதுக்கு முன்னாடி நீ இந்த மாதிரி ரியாக்ட் பபண்ணதில்லை ப்ரண்ட்ஸ்கிட்டயும் பேரண்ட்ஸ்கிட்டயும் எதையும் மறைக்காத.அது ஆபத்து.”
“ அன்னைக்கு கெட்ட கனவு.அதே யோசனையில பாத்ரூம் போனேன்.விழுந்துட்டேன்.”
“ அதான் என்ன கனவுன்னு கேட்கிறேன்?! எதையாவது நினைச்சு பயந்திருந்தால் தான் இந்த மாதிரி தோணும்?!”
“ போட்ல போறோம்.பக்கத்துல நிஷாவும் இருக்கா. எங்க போட்டுக்குக் கீழ தலையில அடிபட்ட ரத்தச் சிதறலோட ஒரு போலீஸ்காரன் தண்ணிக்குள்ள தவிக்கிறான்.என் கையில் பெரிய தடிக்கம்பு.நான் தான் அவனை அப்படி அடிச்ச மாதிரி இருக்கு.”
பூஜா திகிலோடு பேச அருகில் வந்த அவள் அம்மா,” கண்ணு பயப்படாம சொல்லு…மா.ஏன் இந்த மாதிரி கனவு வந்துச்சு?! இது கனவு மாதிரி தெரியலையே?! உண்மையில் நீ இந்த மாதிரி யார் மேலேயாவது கோபப்பட்டியா?!இப்பவாவது மறைக்காம உள்ளதைப் சொல்லு”
“ ஆமா…மா.போன மாசம் நாங்க ப்ரண்ட்ஸ் எல்லோரும் கொச்சின் டூர் போனோம்.அப்ப போட்ல சந்தோசமா ஆடிப் பாடி குதிச்சிட்டிருந்தோம்.பாதி தூரம் போனப்ப எங்க போட்டை பின் தொடர்ந்து ஒரு காலியான படகில் படகோட்டியுடன் போலீஸ்காரர் வந்தார்.வந்தவர் எங்கள் போட்காரரை பெயரைச் சொல்லி கூப்பிட்டார்.
மோட்டார் ஸ்பீடைக் குறைத்த எங்கள் போட்காரர் அவரிடம் பேசினார்.
“ ஏய்….உன் போட்ல என்ன இத்தனை ஜனம்?! நிறுத்து…நிறுத்து”ன்னு கத்தினார் போலீஸ்காரர்.படகிலிருந்து நாங்கள் இருந்த போட்டில் குதித்த அவர்…எங்களை எண்ண ஆரம்பித்தார்.
“ஐயோடா….இத்தனையா?! ஐந்து ஜனம் நம்ம படக்குக்கு வரணும்.இல்லைன்னா போ முடியாது”ன்னு கத்தினார்.
போட்காரர் சொல்ல எங்களிடம்,” பிள்ளைகளா அதிகமா பாரம் இருக்கக் கூடாதாம்.போட் கவிழ்ந்திருமாம்.ஒரு ஐந்து பேர் அந்தப் படகுக்கு மாறினா….போட் போகலாமாம்.இல்லைன்னா போக முடியாதாம்.என்ன சொல்றீங்க….யாராவது ஐந்து பேர் அங்க போறீங்களா?!”ன்னு கேட்டாள் வசந்தி.
“ யாருமே அங்க போக பிரியப்படலை.”
“ கத்தாம….ஆடாம வாங்கன்னா கேட்டீங்களா?! ஒரு இடத்துலநிக்காம ஆட்டம் போட்டீங்க.இப்ப போலீஸ் சொல்றதை கேட்டுத்தான் ஆகணும்.என்ன சொல்றீங்க?!”
“பூஜா மாலா சீதா வனஜா லல்லி நீங்க ஐந்து பேரும் அந்த படகுக்கு போங்க” அப்பிடின்னு அவளாகவே கட்டளை இட வேறு வழி இல்லாமல் அந்தப் படகுக்கு போனோம்.”
“ உங்க கூட பசங்க யாரும் வரலையா?!”
“ வரலை.அவங்க வேறு டூர் போயிட்டாங்க”
“ எவ்வளவு தைரியம் உங்களுக்கு.எத்தனை பேர் போறீங்க?!”
“ நாங்கள் பதினெட்டு பேர்.”
“ ஆனால் என்கிட்ட காலேஜ் டூர்னு தான் சொன்ன பூஜா?!” சற்றே அதட்டலாக அவள் அம்மா கேட்க…” நீங்க விட மாட்டீங்கன்னு….”
“ சரி சொல்லு.அப்புறம் என்னாச்சு?! இந்த டூர் ஏற்பாட்டு லீடர் யாரு?!”
“ வசந்தி தான்.அவளுக்கு கேரளா நல்ல பழக்கம்.சொந்தக்காரங்க கூட கொச்சின்ல இருக்காங்க.மலையாளமும் பேசுவாள்.”
“அவள் ஒருத்தியை நம்பி பதினேழு பேர் போயிருக்கீங்க?!”
“போட் முன்னால் போக பின்னாலேயே எங்க படகு போனது.ஒரு ஐந்து நிமிடம்…யாரோ கண்ணைக் கட்டி விட்ட மாதிரி…முன்னால் போன அந்த போட்டைக் காணோம்.நாங்க பதறி தேடுறோம்.அந்தப் போலீஸ்காரன் பதட்டமில்லாம உட்கார்ந்திருக்கான்.
“ ஸார்….அந்த போட் எங்க?!”
“ ஏன் பதறீங்க?! எல்லாம் இங்க தான் போகும்.” சிகரெட்டை வாயில் வைத்துக் கொண்டே அவர் பேசுற ஸ்டைலே எங்களுக்கு பிடிக்கலை.அவன் பார்வையும் சரியில்லை.போட் ஓட்டுறவனோ எதையும் கண்டுக்காம இருந்தான்.
அது சின்ன படகுன்றதால அந்தப் போலீஸ்காரன் ரொம்ப நெருக்கமா உட்கார்ந்திருந்தான்.படகு அசையிற சாக்குல எங்க மேல உரசவும் செஞ்சான்.
“ உடனே உங்க ப்ரண்ட்சுக்கு போன் பண்ண வேண்டியது தான?!”
“ போன் பண்ணினோம்…மா.அவங்க ஏதோ ஒரு இடத்துல கரை ஏறிட்டதா சொன்னாங்க.நாங்க எந்த இடம்னு எங்களுக்குத் தெரியாததால் போலீஸ்காரன் கிட்ட சசொன்னோம்.” ஸார் அவங்க ஏதோ ஒரு இடத்துல இறங்கிட்டாங்களாம்.எந்த இடம்னு கேட்டு எங்களை அங்க கூட்டிட்டுப் போங்கன்னு சொன்னோம்.”
“ அவரு போனை வாங்கி பேசவே இல்லை.”எல்லாம் எனக்குத் தெரியும்.பேசாம வாங்க”ன்னு அரற்றுகிற மாதிரி பேசினான்.எங்களுக்குப் பயம் அதிகமாகிருச்சு.
“ இருட்டுற மாதிரி இருக்கு ….”
“ இங்க பார்றா….குட்டி என்ன ரொம்பத் துள்ளுற?! ன்னு பேசிக்கிட்டே என் மேல கை வச்சான்.
அம்மாவின் முகம் பயங்கர பீதி அடைவதைப் பார்த்த பூஜா…” அம்மா பயப்படாதீங்க.எதுவும் நடத்திடலை.அந்த நொடியே பக்கத்துல இருந்த கட்டையை எடுத்தேன்.எடுக்கும் போதே அவன் தடுமாற ஏரிக்குள்ள விழுந்தும் டான்.ஆனாலும் தம் பிடிச்சு மேல ஏறப் பார்த்தான்.நான் கட்டையால தலையில் பயங்கரமாக அடிச்சேன்.ரத்தம் வர கீழ சாஞ்சுட்டான்.”
“ அடக் கடவுளே….அந்த படகோட்டி ஒன்னும் செய்யலையா?! இத்தனை நடக்கும் போது கண்டுக்காம வேக வேகமா துடுப்பு போட்டுக்கிட்டே இருந்தான்.அடுத்த பத்தாவது நிமிசம் கரைகிட்ட போனான்.அங்க எங்க பிரண்ட்ஸ் இருந்தாங்க.அவங்களைப் பார்த்ததும் தான் எங்களுக்கு உயிரே வந்துச்சு.”
“ ஏண்டி…இத்தனை நடந்திருக்கு.எங்ககிட்ட எதுவே சொல்லலையே?!”
“எங்க எல்லாருக்கும் பயம்.அடி வாங்கின போலீஸ் உயிரோட இருக்கானா இல்லையா?! இருந்தா எங்களைத் தேடி வருவானோன்னு இந்த பதினைந்து நாளா அங்க இருக்கிற நியூஸ் பேப்பரில் இருந்து மலையாளச் செய்திகள் வரை பார்த்துக்கிட்டிருக்கோம்.அப்பப்ப ராத்திரி பயந்து கத்துறேன்.அது எனக்கே தெரியுது.”
“ அப்புறம் ஏன்டி நான் எழுப்புறப்ப எந்திரிக்கலை.?!” நிஷா சற்றே கோபத்தோடு கேட்க,” ஸாரி..டி.இதை யார்கிட்டேயும் சொல்லக் கூடாதுன்னு பேசியிருக்கோம்.அதான்.”
“ அது சரி.நீ அந்த போலீஸ்காரனை அடிக்கிறப்ப நான் பக்கத்துல இருந்ததா ஏன் சொன்ன?!”
“ அப்ப தான அது கனவுன்னு நம்புவீங்க?!”
“ சரி இப்ப என்ன ஆச்சு?! எதுவும் செய்தி தெரிந்ததா?!”
“இல்லை…மா.இன்னையோட ஒரு மாசம் ஆச்சு.இனி பயம் இல்லைன்னு ப்ரண்ட்ஸ் சொன்னாங்க.”
“ நல்லதோ கெட்டதோ எந்த நியூசுமே வரலையா?! அந்த படகுக்காரன் வேறு ஏதாவது சொன்னானா?!”
“ அந்த ஆள் போலீசே இல்லையாம்.இந்த மாதிரி தனியா வர்ற பிள்ளைங்க கிட்ட வம்பு பண்ணுவானாம்.சில நேரம் அவனோட இடத்துக்கே கூட்டிப் போவானாம்.படகு ஓட்ட வரலைன்னா படகுக்காரனை அடிச்சு துன்புறுத்துவானாம்.
அவங்க அடிச்சது சரி தான்.செத்து ஒழிஞ்சான்னா நிம்மதியா இருக்கும்.ஆனால் உங்களுக்கு பிரச்னையாகிடுமேன்னு தான் யோசிக்கிறேன்னு சொல்லி இருக்கான்.
“ திரும்ப வந்து தொந்தரவு பண்ணுவானான்னு கேட்டிருக்கா வசந்தி.”
“ வரமாட்டான்.பிழைச்சு வந்தால் அடுத்து வர்றவங்களுக்குத்தான் ஆபத்து” ன்னு சொன்னானாம்.
“ அப்புறம் ஏன்டி பயந்த?!” ஆதரவாக பூஜாவை அணைத்துக் கொள்கிறாள் நிஷா.
“ இல்லை….டி.செத்துட்டானோன்னு நினைச்சோம்.”
“ சரி.உங்க பிரச்சனை முடிஞ்சது.அந்த ஆளால அடுத்தவங்களுக்கு அந்த படகுகாரனுக்கு பிரச்சனை வந்தா?!”
“ வந்தா நம்ம என்ன…மா செய்றது?!”
“ நாம ஏன் கொச்சின் போலீஸ்ல கம்ப்ளைண்ட் கொடுக்கக் கூடாது.?!”
“ ஐயோ யார்?! எப்ப?! எப்படிம்மா?!”
“ அப்பாகிட்ட பேசுவோம்.என்ன செய்யலாம்னு கேட்போம்.”
“ அம்மா….அப்பா கோபப்படுவாரு…மா”
“ நீங்களா எங்ககிட்ட சொல்லாம அடுத்த ஸ்டேட்டுக்கு டூர் போனது தப்பு.அதுக்கே உங்களை உதைக்கணும்.ஆனால் பிள்ளைகளா…எதையுமே பெத்தவங்ககிட்ட மறைக்காதீங்கன்னு சொன்னால் உங்களுக்கு ஏன் புரிய மாட்டீங்குது.?!
ஒரு தப்பு பண்ணி மாட்டுனால் அதுக்குப் பிறகாவது பெத்தவங்ககிட்ட பேசுங்க.சிக்கல் மேல சிக்கலா பிரச்சனையை பெரிசா ஆக்காதீங்க.”
“ கூடவே இருக்கிற என்கிட்ட யாவது எதையும் மறைக்காம பழகு”
“ ஸாரி நிஷா.”
பூஜாவின் அப்பா தன் நண்பர்கள் பூஜாவின் தோழிகள் சிலரை அழைத்துக் கொண்டு கொச்சின் சென்று படகு சவாரி செய்த அந்த பெரிய ஏரியின் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேசனுக்கு போகிறார்.
இவர்கள் சொன்னதைக் கேட்ட இன்ஸ்பெக்டர்,” நீங்க சொல்ற ஆளு இவனா பாருங்க?!”ன்னு ஒரு புகைப்படத்தைக் காட்டுகிறார்.
வாங்கிப் பார்த்த பூஜா,” ஆமா இவனே தான்” என்று அலறுகிறாள்.
“ பயப்படாதீங்க …மா.இவன் அடிபட்டதுல மயங்கி கரையோரம் கிடந்தான்.நாங்க ஆஸ்பத்திரியில சேர்த்தப்ப படகுக்காரன் வந்து நடந்ததெல்லாம் சொன்னான்.நாங்க அவன் கண் முழிச்சதும் அடிச்சு உதைச்சு இப்ப தினமும் வந்து கையெழுத்து போடுறான்.எங்க கண்காணிப்புல தான் இருக்கான்.இப்ப எதுவும் செய்யலை.இனி செய்யவும் முடியாது.வெளியில இருந்தாலும் அவனுக்கு ஆயுள் தண்டனை தான்.”
“ ரொம்ப நன்றி சார்”
“ நாங்களும் நன்றி சொல்றோம்இவ்வளவு தூரம் வந்து உள்ளதை சொன்னீங்களே..! காவல்துறைகிட்ட இப்படி எதையும் மறைக்காம இருந்தால் பல குற்றங்களை ஈசியா தடுத்திட லாம்.”
“ சுதந்திரமா இருங்க.ஆனால் கவனமாகவும் தைரியமாகவும் இருக்கவும் பழகிக்கோங்க.அந்த படகுக்காரனும் இவனுக்கு உடந்தையாக இருந்திருந்தால் என்ன பண்ணி இருப்பீங்க?!”
“ அவனையும் ஒரே போடா போட்டிருப்பாள் பூஜா.”சிரித்தவாறே நிஷா சொல்ல…அவள் தலையில் குட்டி,” மக்கு அப்புறம் எப்படி கரை சேருவீங்க?! உங்களுக்கு படகு ஓட்டத் தெரியுமா?! “ என்று பூஜாவின் அப்பா கேட்க…
“ அதானே…கஷ்டம் தான்..பா”
“ இனிமேல் இப்படி சரியான ஏற்பாடுகள் இல்லாமல் எங்கேயும் போகாதீங்க.சரியா?!”
“ சரிங்கப்பா. இனி கவனமா இருப்போம்” என்று பூஜாவும் தோழிகளும் நிஷாவும் வாக்குறுதி தருகின்றனர்.
**************