காய்ச்சலுக்கு வைத்தியம் பார்க்கிறதுக்காக பாவாவை ஆட்டோவில் அழைத்துச் செல்லும் பொழுது இரண்டாவது மகன் சோட்டோவுக்கும் மூன்றாவது மகன் இப்புவுக்கும் தெரியாது, வரும் பொழுது அவரை அமரர் ஊர்தியில்தான் கொண்டு வருவோம் என்று!
மூத்த மகனை இழந்து பத்து பதினைந்து நாள் கூட ஆகல! அந்த கவலைக்கிடையே “இந்த சாதாரண காய்ச்சல் என்ன செய்துவிடப்போகிறது’ என்ற நினைப்பால், பாவாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதை பற்றி அம்மாவும் பெரிதாக ஒன்றும் அலட்டிக் கொள்ளவில்லை.
“எதுக்கும் அவன் கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்குவோம்”.
“நெலம ரொம்ப சீரியஸா இருக்கு! பல்ஸ் வீக்கா இருக்கு! ஏதாவது பிரைவெட் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகவா? இல்ல பெரிய ஆஸ்பத்திரியில சேத்துரவா? என்று நான்காவது மகன் பாபுவிடம் கேட்க, ஒரு கணம் யோசித்த பாபுவிற்கு, சில தனியார் மருத்துவமனைகளின் பித்தலாட்டங்கள் குறித்து நண்பர்கள் கூறியது இந்த நேரத்திலா ஞாபகம் வரனும்!.
“பெரிய ஆஸ்பத்திரிக்கு என்ன குறைச்சல்” என்று தனக்குத்தானே சமாதனப்படுத்திக் கொண்டு “GH லயே சேர்த்திருங்க; இந்தா நானும் கிளம்பி வரேன்” என்று அப்பொழுது கூறியது ‘மாபெரும் பிழையோ?’ என்ற குற்ற உணர்ச்சி இன்று வரை அவனை கொலையாய்க்கொல்கிறது.
“பாவா, நான் பாபு வந்து இருக்கிறேன்! தெரியுதா? நான் தான் பாபு!” என்ற குரல், அரசு மருத்துவமனை பெட்டில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிக் கொண்டு, மஞ்சள் மற்றும் சிவப்புநிற மெல்லிய இரும்பு பைப்புகள் வழியாக வந்து கொண்டிருந்த செயற்கை சுவாசத்தின் உதவியால் இயங்கிக் கொண்டிருந்த பாவாவின் இதயத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை!
“பெரிய ஆஸ்பத்திரிக்கு போகலாம் என்று சொன்னதும் நடந்தே தான் வந்தாரு. ‘லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ்’ என்று கொஞ்சம் சத்தமாகவே கூறிக் கொண்டு வந்தார். ‘ஏன்? அதெல்லாம் ஒன்னும் ஆகாது! பயப்படாதீங்க!’என்று சொன்னேன். பயந்திருப்பார் என்று நினைக்கிறேன்” என்று சோட்டோ சொன்ன பொழுது பாபுவால் அழாமல் இருக்க முடியவில்லை.
பாவா பயந்த அல்லது தனது பயத்தை பிறருக்கு தெரியாமல் மறைக்க முடியாமல் போன முதல் தருணம் அதுவாகத்தான் இருக்க வேண்டும்!
தனது கஷ்டங்கள், வறுமை, உடல்நிலை நலிவுற்ற பொழுது ஏற்படும் சங்கடங்கள், வலி போன்ற எதற்கும் அவர் கண்கலங்கியதே இல்லை. சிரமங்களை வெளிக்காட்டிக் கொண்டு, பிறரின் கருணையை எதிர்பார்த்ததும் கிடையாது. அவ்வளவு வீம்பு மனுஷனுக்கு!
ஒரு முறை தொடையில் வளர்ந்து விட்ட கட்டியை அகற்றிய பொழுது “நீங்களா இருந்ததால தாங்கிக்கிட்டீங்க” என்று டாக்டர் கூறியதாக அவரே சொன்னார். வலி என்ற ஒன்றே பாவாவிற்கு கிடையாதோ!
சேதம் அடைந்து விட்ட சிறுநீரகத்தை அகற்றியே ஆக வேண்டும் என்ற சூழ்நிலை வந்த பொழுது அவருக்கு வயது எழுபதை கடந்திருந்தது. அறுவை சிகிச்சை பற்றிய பயம் அவர் முகத்தில் துளியும் இல்லை.
அறுவை சிகிச்சைக்காக சென்னை செல்ல திருச்சி ஜங்ஷனிலிருந்து கிளம்ப தயாரான பல்லவன் எக்ஸ்பிரஸில் அமர்ந்திருந்த போது, “டேய் அவசரத்துல பாவாஜி செருப்ப போட்டுட்டு வந்துட்டேண்டா, செருப்பு இல்லாம அவன் என்னடா பண்ணுவான்? இதை அவனிடம் கொண்டு கொடுத்துடு” என்று கூறிய பாவாவிற்கு சத்தியமாக தெரியாது, பாவாஜியின் நோயும், அது விரைவில் அவனை காவு வாங்கப்போகிறது என்ற உண்மையும்!
“டேய் நைட்டு நீ இங்கே இருந்து பாத்துக்கோ! காலையில நாங்க வர்றோம்” என்று பாபுவிடம் கூறிவிட்டு கிளம்பி விட்டனர் சோட்டாவும் இப்புவும். பாவம் அவர்கள்! மூத்த அண்ணண் பாவாஜியையும், பாவாவையும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சிகிச்சைக்காக அங்கும் இங்கும் அழைத்துக் கொண்டு திரிந்தது ஒரு அயர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது அவர்களுக்கு.
அரசு மருத்துவமனையில் டாக்டர்களும், நர்சுகளும் அந்த நள்ளிரவிலும் அங்குமிங்கும் நடமாடிக் கொண்டிருந்தார்களே தவிர, சிகிச்சை ஒன்றும் நடப்பதாக தெரியவில்லை!
பாவாவிற்கு பக்கத்து பெட்டில் உட்கார்ந்து கொண்டும், அவ்வப்போது படுத்துக் கொண்டும், பாவா இழுத்து விடும் மூச்சு சத்தத்தை வைத்து, அவர் இன்னும் இறக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டுமிருப்பது தான் அந்த இரவு முழுவதும் பாபுவின் வேலையாக இருந்தது.
பாவா கை கால்களை அசைப்பதும், அதனால் விலகும் அவரது கைலியை பாபு சரி செய்து விடுவதும், இரவு முழுக்க தொடர்ந்தது.
பிரைவெட்ல சேர்த்திருந்தா பாவா ஒருவேளை பிழைத்திருப்பாரோ? என்ற எண்ணம் எப்பொழுதெல்லாம் தலை தூக்குகிறதோ, அப்பொழுதெல்லாம் அந்த குற்ற உணர்வின் காயங்களுக்கு, அந்த இரவு முழுவதும் பாவாவை அவர் பக்கத்திலிருந்து பார்த்துக் கொண்ட தருணங்கள் தான் மருந்தாகி, அவனது ரணங்களை ஆற்றிக் கொண்டிருக்கின்றன.
ஒரு கணம் உற்று நோக்கினான் பாவாவின் முகத்தை! முன்பு பார்த்த கம்பீரம் இப்போது பாவாவின் முகத்தில் காணாமல் போயிருந்தது. எப்படி இருப்பார் பாவா?! பழைய சினிமா நடிகர் செந்தாமரையின் மிடுக்கும், இப்போதைய குணச்சித்திர நடிகர் ராஜ்கிரனின் துடிப்பும் கலந்த கலவை பாவா!
அவர் ஒரு சுயம்பு! தன்னைத்தானே செதுக்கிக் கொண்ட சிற்பி. பத்து வயதில் பெற்றோரை விட்டு விட்டு மதுரையிலிருந்து திருச்சி வந்து, மூட்டை சுமந்து தனக்கென ஒரு அடையாளத்தை தரித்திக்கொண்டவர்.
“உன் தங்கச்சியை நான் கட்டிக்கிறேன் டா” என்று அம்மாவின் அண்ணனிடம் கூறி, தன் திருமணத்தைக் கூட பெற்றோர் தயவின்றி தானே நடத்திக் கொண்டதாக பாவா அடிக்கடி கூறுவார். பிற்காலத்தில் அவரது பெற்றோர்களே அவரிடத்தில் வந்து ஐக்கியமாகினர்.
“சேக் இமாம் மகனா நீ?”, “தலைவர் மகனா?”, “பாய் வீட்டு பிள்ளைங்களா” என்று ஊரார் கேட்பது; “பாய் இருக்கிறார் என்று பார்க்கிறேன்! இல்லைன்னா வாயில நல்லா வந்துடும்” என்று அக்கம் பக்கத்தினர் சொல்வது யாவும் ‘பாவா ஒன்றும் ஊருக்குள் பத்தோடு பதினொன்னு, இத்தோடு இது ஒன்னு’ என்று வாழவில்லை என்பதற்கான சான்றுகள்.
ஜமாத் தலைவராக இருந்த பொழுது, கணவன் ஒருவன் அவனது மனைவிக்கு ‘வீட்டுச்செலவுக்கு சரியாக பணம் தராமல், குடித்து நாசமா போகிறான்’ என்கிற பஞ்சாயத்தை தீர்த்து வைக்கிறேன் பேர்வழி என்று, புருசனை கரண்ட் கம்பத்தில் கட்டி வைத்து மிரட்டி “ஒழுங்கா குடும்பம் நடத்து” என்று ஆலோசனை வழங்கிய நிகழ்வுகளும் நிறைந்தது தான் பாவாவின் கடந்த காலம். இது போன்ற சம்பவங்கள் இப்பொழுது நடக்க வாய்ப்புகள் குறைவு. ரம்ஜான் மாதத்தில் நோன்பு கஞ்சி காய்ச்சி ஊத்துவது, திருமணத்தை நடத்தி வைத்துவிட்டு முதல் பந்தியில் அமர்ந்து கல்யாண விருந்தை சுவைப்பது போன்ற விஷயங்களுக்கே நேரம் போதவில்லை இன்றைய ஜமாத்தார்களுக்கு!
செயற்கை சுவாசத்திற்காக முகத்தில் மாற்றப்பட்டிருந்த ஃபைபர் குப்பியை மீறி வந்த பாவாவின் மூச்சு சத்தம், சற்றே கண்ணயர்ந்துவிட்ட பாபுவை எழுப்பி விட்டிருந்தது.
ஐந்து ஆண் பிள்ளைகள் இரண்டு பெண் பிள்ளைகள் என மொத்தம் ஏழு பிள்ளைகள் என்றிருந்தாலும், எந்த பிள்ளைகளிடத்திலும் பாவா பாசத்தில் வேற்றுமை பாராட்டியதில்லை.
“எல்லாரையும் நல்லாத்தான் படிக்க வச்சேன், ஆனா நீ மட்டும் தான் காலேஜ் வரைக்கும் வந்திருக்கிறாய்! ஒழுங்கா படிச்சு ஒரு டிகிரிய வாங்கிடு; ஒரு புள்ளையவாவது டிகிரி வாங்க வச்ச சந்தோஷத்தை மட்டும் கொடு; மத்தபடி உன் சம்பாத்தியம் எல்லாம் எனக்கு வேணாம்!” என்று பாவா கூறியது, அந்த இருட்டிலும் பளிச்சென்று நினைவுக்கு வந்தது.
டிகிரி வாங்கியதோடு மட்டும் நிற்காமல், எதையெதையோ படித்து, என்ன என்ன பரீட்சையோ எழுதி, படித்த கல்லூரியிலேயே பேராசிரியர் ஆனது பாவாவிற்கு, பாபு தந்த போனஸ் சந்தோஷம். அந்த விதத்தில் பாவா முழு திருப்தி அடைந்திருக்க கூடும். பாபுவும் தான்.
பாவா ஒரு பல்துறை வித்தகர். எல்லாவற்றையும் பற்றி ஏதாவது தெரிந்து வைத்திருப்பார். அலாதியான ஞாபக சக்தி. நேரம் கிடைக்கும் போதெல்லாம் பழைய விஷயங்களை பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்லுவார். வரலாறு முக்கியமல்லவா?
“ச்சீ! இன்னைக்கு உளுந்தங்களி தானா!” என்று சலித்துக் கொள்ளும் பிள்ளைகளிடம் “டேய் தமிழன் களி திங்கிறதை வச்சு தாண்டா, வெள்ளைக்காரன் நம்ம நாட்டையே புடுச்சான்” என்று கூறி ஆச்சரியத்தை கிளப்புவார்.
‘தட்டின் ஓரப்பகுதியில் ஆரம்பித்து மையப்பகுதியில் முடிக்க வேண்டும்; இல்லையேல் கையை சுட்டு விடும்’ என்பது களி சொல்லும் தத்துவம். இதை வைத்துதான் முதலில் சுற்றி உள்ள பகுதிகளைப்பிடித்து, பிறகு இந்தியாவின் மையப்பகுதிகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான் வெள்ளையன் என்பது பாவா கூற வரும் கோட்பாடு. ஆனால் இந்த தத்துவங்கள் எவையும் களியை சிரமமின்றி தொண்டைக்குள் இறக்க ஒருநாளும் பிள்ளைகளுக்கு உதவியதே இல்லை!
பாவாவின் டவுசர் பாக்கெட்டில் எப்பொழுதும் இல்லாமல் இருந்ததில்லை இரண்டு மஞ்சள் பைகள். பாவா ஒரு நாளும் வெறும் கையை வீசிக்கொண்டு வீட்டிற்கு வந்ததே இல்லை. பாவா பின்னிரவில் வீட்டிற்கு வந்து விட்டு, விடியும் முன்பே வேலைக்கு சென்று விட்ட விசயம், பகலில் அம்மா தின்பண்டங்களை பிரித்து தரும்போது தான் பிள்ளைகளுக்கே தெரியும்.
“உங்க அப்பா உங்களுக்கு தீனி வாங்குன காசுக்கு ஒன்பது வீடு கட்டி இருக்கலாம்” என்று ஏளனமாக ஊரார் பேசுவதில் உண்மை இல்லாமல் இல்லை!
பிள்ளைகளுக்கு பாவா சொத்து ஒன்றும் சேர்த்து வைத்திருக்கவில்லை. இருந்த ஒத்த வீடும் மூத்த மகள் கல்யாண கடனில் மூழ்கி விட்டதால், பிரித்துக் கொள்வதற்கும், அடித்துக் கொள்வதற்கும் அண்ணன் தம்பிகளிடத்தில் எதுவுமே இல்லை.
திடீரென்று வந்த செவிலி ஒருத்தி, “ஐயாவை மேல உள்ள வார்டுக்கு மாத்தணும்! பொருட்களை எடுத்துக்குங்க” என்று கூறி பழைய நினைவுகளிலிருந்து பாபுவை மீட்டெடுத்தாள்.
‘இனி ஒன்றும் தேராது’ என்று முடிவெடுத்து, வேறு இடத்திற்கு தள்ளிவிடும் சம்பிரதாயம் தான் அது என்பதை, சில மணி நேரங்களில் பிரிந்த பாவாவின் உயிர்தான் உறுதிப்படுத்தியது.
கிடத்தி வைக்கப்பட்ட பாவாவின் கைகளை பிடித்துக் கொண்டு அழுதனர் அவர் பெற்ற பிள்ளைகள். காய்ப்பு காய்ச்ச அவரது உள்ளங்கைகள் கூறின அவர் சுமந்து சென்ற சிமென்ட் மற்றும் உரமூட்டைகளின் எண்ணிக்கையை! சிறுவயதில் பிள்ளைகளுக்கு குளிப்பாட்டி விடும் பொழுது சோப்போ, உடைந்த ஓட்டின் துண்டுகளோ தேவைப்பட்டதில்லை பாவாவிற்கு. அழுக்கை அகற்ற அவரது சொரசொரப்பு கைகளே போதுமானதாக இருந்தன.
உள்ளூர் வெளியூர் என பலரும் பாவாவின் ஜனாஸாவை (உயிரற்ற உடல்) பார்க்க வந்திருந்தனர். ஒரு புறம் கபர்ஸ்தானில் குழிவெட்டும் பணிகள் நடந்து வந்தது. மறுபுறம் மெளத்திற்கு வந்தவர்களில் பலரும், பாவாவுடனான தங்களின் அனுபவங்களை அசைபோட்டுக் கொண்டிருந்தனர்.
பாவாவை மருத்துவமனையில் சேர்த்திருந்தது அறிந்து, ரயிலில் வந்து கொண்டிருந்த இளைய மகள், பாவாவின் இறப்பு செய்தி கேட்டு அலறிய சத்தம், எஞ்சின் சத்தத்திற்கு ஈடாக இருந்ததாக அவள் கணவன் கூறிக் கொண்டிருந்தார்.
லுஹர் (நண்பகல் தொழுகை) நேரத்தில் ஜனாஸா குளிப்பாட்டப்பட்டு, கஃபனிடப்பட்டு (தைக்கப்படாத வெள்ளைநிற துணி), அருகில் உள்ள மஸ்ஜித்தில் அவருக்காக ஜனாஸா தொழுகை (இறந்தவரின் பாவ மன்னிப்பிற்காக நிறைவேற்றப்படும் இறுதித்தொழுகை) நடத்தப்பட்டது.
அலுமினிய சந்தூக் பெட்டியில் வைக்கப்பட்ட பாவாவின் ஜனாஸா, பலரின் தோள்களில் மாறி மாறி தவழ்ந்து, கபரஸ்தானை அடைந்தது. பதினைந்து நாட்களுக்கு முன்னர், மூத்த மகன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் மிக அருகாமையிலேயே பாவாவிற்கு குழி தோண்டப்பட்டிருந்தது. குழியில் பாவாவின் உடல் மிகவும் கவனமாக இறக்கி வைக்கப்பட்டு, உடலில் மண் நேரடியாக விழாதவாறு சவுக்கு கட்டைகள் சரிவாக அடுக்கப்பட்டு, அதன் மீது ஓலைப்பாய்கள் விரிக்கப்பட்டு, மண்ணை தள்ளி குழியை மூடும் பொழுது, ஒரு சகாப்தம் நிறைவடைந்திருந்தது.
“எங்க வீட்டு ஆலமரமே சாய்ச்சிருச்சே” என்று சோட்டா அலரும் பொழுது, ஓங்கி உயர்ந்த ஒரு ஆலமரத்தின் வீழ்ச்சி, எத்தகைய அதிர்வுகளை ஏற்படுத்தக் கூடியவை என்பதை உணர்ந்த அனைவருமே அழுது வெடித்தனர்!!!
முற்றும்….